நேரம் ஒதுக்காத அமித்ஷா?…பதற்றத்தில் பரிதவிக்கும் ஓபிஎஸ்!…

Author: Udayachandran RadhaKrishnan
12 November 2022, 10:20 pm

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள் என அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்வதால் அதிமுகவை முழுமையாக வழிநடத்தச் செல்லும் தகுதி அவருக்கே இருக்கிறது என்ற எண்ணம் பல்வேறு கட்சியினரிடமும் பரவலாக உள்ளதை பார்க்க முடிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி போட ஆர்வம்

குறிப்பாக பாஜக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய தமிழகம், இந்திய ஜனநாயக கட்சி போன்றவை இதை நன்றாகவே உணர்ந்துள்ளன. அதனால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து இக் கட்சிகளின் தலைவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதும் உண்மை.

இந்த நிலையில்தான், கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் கைகோர்த்து செயல்படவேண்டும், அவர்களுடன் சசிகலாவும், டிடிவி தினகரனும் ஒன்று சேர்ந்தால் 2024 தேர்தலில் திமுக கூட்டணியை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற வாதத்தை சில ஆடிட்டர்கள் பாஜக தலைமையிடம் முன் வைத்து வருகின்றனர்.

பிடிகொடுக்காத இபிஎஸ்

ஆனால் இதுவரை எடப்பாடி பழனிசாமி அதற்கு பிடி கொடுக்கவே இல்லை. அண்மையில் திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மதுரை வந்தபோது அவரை எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்சும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாகவே வரவேற்றனர். அதேபோல வழியனுப்பியும் வைத்தனர்.

சந்திக்க மறுத்த பிரதமர்

யாராவது ஒருவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசினால், அதை அவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொள்ளலாம் என்று கருதி பிரதமர் மோடி இருவரையும் சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் மறுநாள் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த தனியார் நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்காக ஓ பன்னீர்செல்வம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு அமித்ஷா ஒப்புக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

கைக்குலுக்கி சென்ற அமித்ஷா

தனிப்பட்ட முறையில் இருவருடைய சந்திப்பு நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடைபெறவில்லை. இந்த நிகழ்ச்சியில் மரியாதை நிமித்தமாக வெறுமனே இருவரும் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். அதிமுக குறித்து எதுவும் பேசவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஓ பன்னீர்செல்வம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்-ஐ இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்.

செல்லாத ரூபாய் ஓபிஎஸ்

அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிமுகவை பொறுத்தவரை ஒருவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டால் மீண்டும் அவருடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது. கட்சியில் மீண்டும் அவரை இணைப்பதும் சாத்தியம் இல்லை. எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஒன்றிணைய எந்த ஒரு வாய்ப்பும் அறவே கிடையாது.

அதிமுகவின் 2 ஆயிரத்து 532 பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளோம். பிரதமரை சந்தித்ததில் எந்த அரசியல் உள்நோக்கமும் கிடையாது. கூட்டணி கட்சி என்பதால் அவரை மரியாதை நிமித்தமாக எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அதிமுகவை பொறுத்தவரை ஓ.பன்னீர்செல்வத்தை செல்லாத 1000 ரூபாய் நோட்டாகத்தான் பார்க்கிறோம்.

அவருடன் யாரும் எந்த தொடர்பிலும் இல்லை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணியுடன் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” என்று குறிப்பிட்டார்.

தனித்து செயல்பட்ட ஓபிஎஸ்

“பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தனிப்பட்ட முறையில் ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்காமல் போனதற்கு தென் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள்தான் முக்கிய காரணம். அவர்கள்தான் பாஜக நினைப்பதுபோல் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ்க்கு தனிப்பட்ட எந்த செல்வாக்கும் இல்லை என்பதை உணர்த்தியவர்கள்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“2021 சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வம் தீவிர பிரச்சாரம் செய்திருந்தால் இன்னும் 15 தொகுதியில் வரை அதிமுக கூட்டணிக்கு கிடைத்திருக்கும். ஆனால் அவர் தனது தொகுதியைத் தவிர வேறு எங்குமே பிரச்சாரம் செய்யவில்லை.

அதனால் அவர் சார்ந்த சமுதாய வாக்குகளில் ஓரிரு சதவீதம் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு சென்றுவிட்டது. அதேபோல சசிகலா ஆதரவு வாக்குகளும் தினகரனுக்குத்தான் கிடைத்தது. எனவே அந்தத் தேர்தலில் அவர்கள் மூவரின் ஓட்டு சதவீதமும் 2.4 என்றுதான் கணக்கில் கொள்ளவேண்டும். அதுவும் 161 தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் 10 லட்சம் ஓட்டுகளை மட்டுமே அமமுக பெற்றது.

போலியான கட்டமைப்பு

எனவே ஓபிஎஸ்க்கு என்று தனிப்பட்ட செல்வாக்கு எதுவும் கிடையாது. தவிர டிடிவி தினகரன், சசிகலா, ஓ பன்னீர்செல்வம் மூவரும் ஒரே அணியில் இருந்தால் கூட முன்பு அமமுகவுக்கு கிடைத்த ஓட்டு அப்படியே திரும்ப கிடைக்குமா? என்பதும் சந்தேகம்தான். ஏனென்றால் முக்குலத்தோர் சமுதாய மக்கள் எல்லா கட்சிகளிலுமே இருக்கிறார்கள்.

அவர்கள் இந்த மூவரை மட்டுமே ஆதரிப்பார்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. இந்த உண்மையை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தென் மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விளக்கமாக எடுத்துக் கூறிவிட்டனர். ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளர்களோ, தங்களுக்கு தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாய மக்களிடையே அமோக செல்வாக்கு இருப்பதாக குறிப்பிட்ட சில ஊடகங்கள் மூலம் தொடர்ந்து போலியான ஒரு கட்டமைப்பை உருவாக்கி வருகின்றனர்.

இபிஎஸ்க்கு ஆதரவு

அதனால்தான் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு தொண்டர்கள் மூலம் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் மக்களின் பொதுப்பிரச்சனைகளுக்காக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தியது போல ஓபிஎஸ்ஸால் இதுவரை எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் பொதுக்கூட்டத்தையும் முன்னெடுத்து நடத்த முடியவில்லை. தன் பின்னால் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதாக கூறும் ஓ பன்னீர்செல்வம் இதைச் செய்யத் தவறியதால்தான் ஆரம்பத்தில் பாஜக தலைமையிடம் அவருக்கு இருந்த ஆதரவு தற்போது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.

ஆடிட்டர் கை கொடுத்தாலும் கூட அது பலனளிக்காமல் போய்விடுகிறது. இதன் காரணமாகவே முன்பு அமித்ஷாவை சர்வ சாதாரணமாக சந்தித்த ஓ பன்னீர்செல்வத்தால் தற்போது அது இயலவில்லை” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் காரணம் கூறுகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0