தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து அம்மா இருசக்கர வாகன திட்டம் ரத்தாகிறதா..? கிடப்பில் கிடக்கும் விண்ணப்பங்கள்.. அதிர்ச்சியில் காத்திருக்கும் மகளிர்..!!!

Author: Babu Lakshmanan
4 April 2022, 2:18 pm

தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டுகளை எட்டவுள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு , அதாவது தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அதில், மாதாந்தோறும் மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை, நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்க வாக்குறுதிகளாகும்.

ஆனால், தற்போது இந்த திட்டங்களுக்கான பயனாளிகளுக்கு சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து, பயனாளிகளை குறைத்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு ஆக உள்ள நிலையில், இதுவரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இப்படியிருக்கையில், அண்மையில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Students_UpdateNews360

அதோடு, உயர்கல்வி படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை உள்பட பல்வேறு அறிவிப்புகள் ஒருபுறம் மக்களிடையே சற்று மகிழ்ச்சியை அளித்திருந்தாலும், சட்டப்பேரவையில் வெளியான மற்றொரு அறிவிப்பு சொல்லா துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது.

அதாவது, ஏழை மக்களுக்கு பயனுள்ளதாக இருந்து வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தது தான்.. அரசின் இந்த அறிவிப்பு, கடந்த இரு ஆண்டுகளாக, நிதியுதவிக்கு விண்ணப்பித்து காத்திருந்த, பல பெண்களுக்கு ஏமாற்றத்தையே தந்துள்ளது.

ஏழை, எளிய மக்களுக்கும் பயனுள்ள இந்தத் திட்டத்தை திமுக அரசு செய்திருப்பது குறித்து அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அதிமுக அரசு கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு ஒவ்வொன்றாக ரத்து செய்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்தது.

இந்த நிலையில், தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து, அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டமும், கைவிடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேபோல், மகளிர் திட்ட அலுவலகத்தில், இரு சக்கர வாகனம் வேண்டி விண்ணப்பித்தும், பல பெண்கள் காத்திருக்கின்றனர். இத்திட்டமும் முடங்கிவிடுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பணிக்கு செல்லும் ஏழை, எளிய மக்கள் பயனடையும் விதமாக, கடந்த 2018ம் ஆண்டு அம்மா இருசக்கர வாகன திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் என, இவற்றில் எது குறைவோ, அத்தொகை வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் பயனாளியாவதற்கு, எட்டாம் வகுப்பு படித்து, ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பதோடு, ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால் போதுமானது என்ற தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு கிராமத்து பெண்கள் பயனடைந்தனர்.

ஆனால், இந்த திட்டத்தில் கடந்த ஓராண்டாக விண்ணப்பித்தவர்களுக்கு, எந்த அறிவிப்பும் வெளியாகாததால், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டமும் முடக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது :- அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு நிதி விடுவித்த உடனே, பயனாளிகளுக்கு கொடுக்கும் வகையில், விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அறிவிப்பு வராமல் எதையும் உறுதியாக கூற முடியாது, எனக் கூறினர்.

ஆட்சியில் இருக்கும் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள், ஆட்சி மாற்றம் வந்தால் ரத்து செய்யப்படுவது பொதுமக்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றும் செயல் என்றே வெளிப்படுகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1746

    0

    0