அம்மா உணவகம் மூடல்… புனைசுருட்டு காரணங்களை அவிழ்த்துவிடுவது வெட்கக்கேடு : இபிஎஸ் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 3:59 pm

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்று வேளையும் குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயிறார சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் மாண்புமிகு அம்மா அவர்கள் 2013-ஆம் ஆண்டு அம்மா உணவகங்களை துவங்கினார்கள்.

மக்களுடைய ஏகோபித்த ஆதரவின் காரணமாக இந்த உணவகங்கள் படிப்படியாக அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் சில பேரூராட்சிகள் என தமிழகம் முழுவதும் விரிவாக்கப்பட்டது.

சென்னையில் ஒரு வார்டுக்கு இரண்டு என்ற எண்ணிக்கையில் 200 வார்டுகளிலும், அரசு பொது மருத்துவமனைகளிலும் 400-க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டு இட்லி, பொங்கல், கலவை சாதங்கள், சப்பாத்தி போன்ற உணவு வகைகள் மலிவு விலையில் வழங்கப்பட்டது.
இதன்மூலம் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்கள் பசிப் பிணியை தீர்த்துக்கொண்டனர். இந்த உன்னத திட்டத்தைக் கொண்டுவந்த மாண்புமிகு அம்மா அவர்களை, மக்கள் அனைவரும் மனதாரப் பாராட்டினார்கள்.

சாப்பிடச் செல்லும் மக்கள் 2021-க்கு முன்பு இருந்த அம்மா உணவகங்களையும், அதன் தற்போதைய நிலையையும் கண்ணீருடன் ஒப்பிடுகின்றனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் குறைந்துகொண்டே செல்கின்றனர்.

இதையே காரணமாகக் கொண்டு, இங்கு சாப்பிட வரும் மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற ஒரு பொய், புனைசுருட்டு காரணங்களை இந்த விடியா ஆட்சியாளர்கள் அவிழ்த்துவிடுவது வெட்கக்கேடானது.

அம்மாவின் அரசில் ஏழை, எளிய மற்றும் தொழிலாளர்களின் அன்னபூரணியாக விளங்கிய அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் நிதியை உடனடியாக ஒதுக்கி, ஏழை, எளிய மக்களின் வயிற்றுப் பசியை முழுமையாகப் போக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி என்ற பெருமையைப் பெற்ற விடியா திமுக அரசு குறைந்த அளவு நிதியை ஒதுக்கி, விஞ்ஞான முறையில் அம்மா உணவகங்களை மூட முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!