மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு காலமானார் : அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்!!
Author: Udayachandran RadhaKrishnan15 September 2022, 8:36 pm
மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், மறக்க முடியாத அத்தியாயமாக இருந்து வரும் டத்தோ எஸ்.சாமிவேலு இன்று காலமானார்.
மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்தவருமான டத்தோ சாமிவேலு கோலாலம்பூரில் இன்று காலமானார்.
அவருக்கு வயது 86. டத்தோ எஸ்.சாமிவேலு மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மலேசிய தமிழர் அரசியல் வரலாற்றில், மறக்க முடியாத அத்தியாயமாக இருந்து வரும் டத்தோ எஸ்.சாமிவேலுவின் இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் தலைவராக இருந்தவர் டத்தோ சாமிவேலு. கடந்த 1979ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
அரசியலில் இருந்து மக்கள் சேவை ஆற்றியதோடு, 1963ல் இருந்து மலேசிய வானொலி மற்றும் மலேசிய தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் தமிழ் செய்தி அறிவிப்பாளராக பணியாற்றினார்.
அதேபோல் மலேசிய தகவல் இலாகாவில் நாடக கலைஞராகவும் பணியாற்றி அவர், ஒரு தமிழ்மொழி ஆர்வலராக விளங்கினார். டத்தோ எஸ்.சாமிவேலுவின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலு அவர்களின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார்.