திமுக ஆட்சிக்கு வந்த 14 மாதங்களில் 5 முறை பால் விலை உயர்வு : விலையேற்றத்தை தடுக்க தவறிய அரசு ; அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
12 ஆகஸ்ட் 2022, 1:10 மணி
Quick Share

தமிழகத்தில் இரு தனியார் பால் நிறுவனங்கள், பால் விலையை உயர்த்தியிருப்பது பாமர மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பால் விலை உயர்வை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் இரு தனியார் நிறுவனங்களின் பால் விலைகள் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற தனியார் நிறுவனங்களின் பால் விலைகளும் அடுத்த சில நாட்களில் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த 6 மாதங்களில் செய்யப்பட்ட மூன்றாவது விலை உயர்வு ஆகும்!

தமிழ்நாட்டில் மூன்று வகையான ஆவின் பால்கள் லிட்டர் முறையே ரூ.40, ரூ.44, ரூ.48 என்ற விலையில் விற்கப்படுகின்றன. இதே வகையான பால்களை தனியார் நிறுவனங்கள் ரூ.54 – 56, ரூ.64-66, ரூ. 70-72 வரை விற்கின்றன. ஆவினை விட தனியார் பால் விலை 50% வரை அதிகம் ஆகும்!

தமிழ்நாட்டின் பால் சந்தையில் 84% தனியார் நிறுவனங்களிடம் இருப்பதால், இந்த விலை உயர்வால் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவார்கள். 14 மாதங்களில் தனியார் பால் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள போதிலும் அதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது!

பால் சந்தையில் ஆவினின் பங்கை 50% ஆக உயர்த்துவது; பால் விலை ஒழுங்குமுறை ஆணையத்தை அமைப்பது ஆகியவற்றின் மூலமாகத் தான் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு விலை உயர்விலிருந்து மக்களைக் காக்க வேண்டும்!, எனக் கேட்டுக் கொண்டார்.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 482

    0

    0