அதுக்குன்னு இப்படியா… துடிதுடித்துப் போன பிளஸ் 2 மாணவர்கள்… வீடியோவை வெளியிட்டு அன்புமணி ராமதாஸ் காட்டம்..!!

Author: Babu Lakshmanan
5 May 2022, 4:26 pm

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மாணவர்களிடையே பள்ளி நிர்வாகங்கள் காட்டிய கெடுபிடி குறித்து பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வருகிறது. கோடை வெயிலை காரணம் காட்டி, பிற வகுப்பினர் நேரடியாக தேர்வு எழுதுவதற்கு மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மதுரையில் கொளுத்தும் வெயிலில் பள்ளி நிர்வாகத்தின் கெடுபிடியால், காலில் செருப்பு அணியாமல், மாணவர்கள் சிரமப்படும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :-
மதுரை மகாத்மா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் +2 தேர்வு எழுதி முடித்து விட்டு, தகிக்கும் தார்சாலையில், காலணி அணியாமல் மாணவ, மாணவியர் துடித்துக் கொண்டு வந்த காட்சி காண்போர் அனைவரையும் கவலைகொள்ளச் செய்தது. பள்ளி நிர்வாகத்தின் புரிதலின்மையே இதற்குக் காரணம்!

முறைகேடுகளை தடுக்க தேர்வு அறைக்குள் காலணிகள் அணிந்து வரக்கூடாது என்பது தான் அரசின் கட்டுப்பாடு. ஆனால், சில தனியார் பள்ளி நிர்வாகங்கள் தேர்வு மையத்திற்கு அடுத்த தெருவில் வாகனங்களை நிறுத்தி விட்டு, வெறும் காலுடன் மாணவர்களை தேர்வு மையத்திற்கு அனுப்பியதன் விளைவே இது.

மதுரையில் இன்று 40* செல்சியஸ் வெயில். கொதிக்கும் வெயிலில் நடந்தால் கால் பாதங்களில் கொப்பளங்கள் ஏற்படும். ஆணியோ, முள்ளோ குத்தி பாதிப்பு ஏற்பட்டால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படலாம். பள்ளி நிர்வாகங்கள் விதிகளை சரியாக புரிந்து செயல்படுத்த வேண்டும்.

தேர்வு அறையின் வாசல் வரை காலணி அணிந்து வர தடை கிடையாது. இதை தெளிவாக விளக்கி மாணவர்களை காலணி அணிந்து சாலைகளில் செல்வதை உறுதி செய்யும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்த வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!