அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்னது என்னாச்சு..? ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியுமா..? தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 11:59 am

ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை தமிழக அரசு நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மின் நுகர்வு இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும், ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை கொண்டிருந்தாலும் முதல் 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என்று அண்மையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின்கட்டணத்தை செலுத்த முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. எனவே, இது தொடர்பான சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் உள்ளன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. அதனால் மின் சந்தாதாரர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்!

மின்வாரிய சீர்திருத்தத்திற்காக ஆதார் இணைப்பு செய்யப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்வதற்கு முன் அது குறித்து மக்களிடம் விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதிய அவகாசம் கொடுக்காமல் திணிக்கக் கூடாது!

ஆதார் இணைப்புக்கான இணையவழி இணைப்பு ஒரு வாரத்திற்கு முன்பு தான் வெளியிடப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே லட்சக்கணக்கானோர் மின் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. அதற்குள்ளாகவே ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பது நியாயமல்ல!

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை எதற்காக இணைக்க வேண்டும் என்பதே பெரும்பான்மையானோருக்கு தெரியவில்லை. அது குறித்து மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும். ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும்!

ஆதாரை இணைப்பதற்கு குறைந்தது இரு மாதம் அவகாசம் வழங்கப்பட வேண்டும். அதற்குள்ளாக மின் பயன்பாடு குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் மின்வாரிய ஊழியர்கள் கணக்கீடு செய்ய செல்லும் போது, பயனாளிகளின் ஆதார் அட்டையை பெற்று அங்கேயே இணைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • srikanth tells about the incident when he was watching dragon movie டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…