நீட் தேர்வு அச்சம்… கடந்த 10 நாட்களில் 3 பேர் தற்கொலை… தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது…? அன்புமணி ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
16 July 2022, 4:49 pm

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் பெரும்பாலான மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதனிடையே, நீட் தேர்வு தோல்வி பயத்தால் கடந்த சில தினங்களில் தனுஷ் மற்றும் முரளி கிருஷ்ணா ஆகிய இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில், அரியலூரில் நிஷாந்தி என்ற மாணவி இன்று அதிகாலை தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

நீட் தேர்வு அச்சுறுத்தலால் மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தில் அரியலூரைச் சேர்ந்த நிஷாந்தி என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது அனுதாபங்கள்.

நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 10 நாட்களில் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி என மூவர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். நீட் மாணவர்க்கொல்லி என்பதற்கு இது தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.

இவ்வளவுக்குப் பிறகும் இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் சலனமில்லாமல் இருப்பது ஏமாற்றத்தையும், கவலையையும் அளிக்கிறது. தமிழக அரசு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், மத்திய அரசை அணுகி நீட் விலக்கு சட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் பெற வேண்டும்.

அதே நேரத்தில் நீட் சிக்கலுக்கு தற்கொலை தீர்வல்ல என்பதையும், மருத்துவம் மட்டுமே படிப்பல்ல என்பதையும் மாணவர்களும், பெற்றோரும் உணர வேண்டும். நீட்டுக்கு அஞ்சி மாணவச் செல்வங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • வெட்கமே இல்ல? புது மருமகளை சக நடிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நாகார்ஜூனா!
  • Views: - 745

    0

    0