விலை உயர்வால் பச்சை கவர் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு… தனியார் நிறுவனங்களுக்கு லாபம் ; அன்புமணி குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 11:16 am

ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டதால், பச்சை நிற கவர் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆவின் பச்சை உறை பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் லிட்டருக்கு ரூ.16 கூடுதலாக கொடுத்து ஒரு லிட்டர் ரூ.60 என்ற விலைக்கு ஆரஞ்சு உறை பாலை வாங்கும் நிலைக்கு ஆவின் வாடிக்கையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்!

பச்சை உறை பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முதன்மை காரணம் ஆரஞ்சு உறை பால் விலை உயர்த்தப்பட்டது தான். ஆரஞ்சு பால் விலை லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60 ஆக உயர்த்தப்பட்டதால் அதன் தேவை குறைந்து விட்டது. குறைந்த விலையில் கிடைக்கும் பச்சை உறை பால் தேவை அதிகரித்திருக்கிறது!

பச்சை உறை பாலுக்கான தேவை அதிகரித்திருப்பது ஆவின் நிர்வாகத்திற்கு தெரியும். பச்சை உறை பாலை பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப தட்டுப்பாடின்றி ஆவின் வினியோகித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியதால் ஒருபுறம் மக்களுக்கு பாதிப்பு; மறுபுறம் தனியார் நிறுவனங்களுக்கு லாபம்!

வாடிக்கையாளர்களை ஆவின் ஏமாற்றக்கூடாது. பச்சை உறை பால் வினியோகத்தை குறைந்தது 20% அதிகரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை இருந்தால் ஆரஞ்சு உறை பாலின் விலையை முன்பிருந்தவாறே லிட்டர் ரூ.48 என்ற அளவுக்கு குறைக்க ஆவின் நிறுவனம் முன்வர வேண்டும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?