பெரியாரின் வாரிசு எனச் சொல்லி பச்சோந்தித்தனம்… இனி பேசவே கூடாது… கி.வீரமணியை மறைமுகமாக சாடிய அன்புமணி ராமதாஸ்!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 5:56 pm

தந்தை பெரியாரின் வாரிசு எனச்சொல்லி பச்சோந்திதனமாக செயல்படுவதாக தி.க. தலைவர் கி.வீரமணியை மறைமுகமாக சாடியுள்ளார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

பா.ம.க அவசர செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அரங்கில் , பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ம.க தலைவர் ஜி.கே மணி, இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவசர செயற்குழு கூட்டத்தில் மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :- தமிழ்நாட்டின் சமூக நீதிக்கு ஒரு கேடு நடந்து இருக்கிறது. வன்னியர்களின் இட ஒதுக்கீடு பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் சமூக நீதி பிரச்சனை. தமிழகத்தின் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. காரியம் வேண்டுமா அல்லது வீரியம் வேண்டுமா என்றால் இன்று காரியம் தான் வேண்டும் என்று சொல்வேன். காரியம் இல்லை என்றால் வீரியம் தானாக வரும்.

Image

27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்கு காரணம் மருத்துவர் ராமதாஸ். இருந்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சில நன்மைகள் நடைபெற்று உள்ளது. சரியான புள்ளிவிவரங்கள் , தரவுகள் உள்ளது. நீதிபதிகளுக்கு சாதி உணர்வு இல்லையா..? சாதி வெறி பிடித்த நீதிபதிகள் இருக்கின்றனர்.

தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் நல்ல தீர்வை கொண்டு வருவார் என நம்புகிறோம். புள்ளிவிவரங்களுடன் மீண்டும் சட்டமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றினால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. முதல்வர் மற்றும் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் ஆர்வமாக இருந்தனர். அதனை மறுக்க முடியாது. சாதிவாரி கணக்கெடுப்புக்கும் இந்த தீர்ப்புக்கும் தொடர்பு இல்லை. வன்னியர்கள் கல்வி வேலைவாய்ப்பில் எந்த அளவில் பின் தங்கி உள்ளனர் என்ற புள்ளி விவரத்தை கேட்கின்றனர். போராட்டம் குறித்து பேச அவசியம் இல்லை.தமிழகத்தில் மிகப்பெரும் சமூகத்தினர் வன்னியர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் முன்னேறினால் தமிழ்நாடு செழிப்பாக இருக்கும்.

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஏன் வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து குரல் கொடுக்கவில்லை. திமுக , அதிமுக, தி.க என எந்த கட்சியும் வாய்திறக்கவில்லை. தந்தை பெரியாரின் வாரிசு எனச்சொல்லி கொள்ளும் நபர் பச்சோந்திதனமாக செயல்படுகிறார் (கி.வீரமணி ). அவருக்கு சமூக நீதிபற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இனிமேல் அவர் சமூக நீதி பற்றி பேசினால் கருப்பு கொடி காட்டுங்கள்.

Image

நல்ல வேலை இந்த வழக்கு அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்படவில்லை. தமிழக அரசு 10.5 விழுக்கடிற்கு அதிகமாக இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கொண்டுவர வேண்டும். இந்த தீர்ப்பு ஒரு இடைக்கால தடை மட்டும் தான். இறுதியில் வெற்றி பெறுவோம் என்பது உறுதி, என்றார்.

தொடர்ந்து மேடையில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது :- தற்போது வீர ஆவேசம் தேவை இல்லை. தமிழக முதல்வரால் ஒரே வாரத்திற்குள் அவர்கள் கேட்கும் புள்ளி விவரத்தை அளிக்க முடியும். ஆனால், நான் சொல்கிறேன். இரண்டு வாரம் கூட முதல்வர் அவகாசம் எடுத்து கொள்ளட்டும். இதனை முதல்வர் ஸ்டாலின் செய்து முடிப்பார் என நம்புகிறேன்.

Image

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதற்கென்று சிறப்பான நாளை அரசு ஒதுக்கி சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.இதற்கென்று போராட்டம் எல்லாம் நான் அறிவிக்க மாட்டேன். தமிழக முதல்வர் விரைந்து செய்து முடிப்பார்.10.5 விழுக்காட்டில் இல்லாத மற்ற சமூகத்தினர் வாழ கூடாது என நாங்கள் நினைப்போமா..?, பிற்படுத்தபட்டோர் தாழ்த்தபட்டோருக்கு இதனால் பாதிப்பு இல்லை.

TNPSC , Open competition-ல் எந்தெந்த சாதியினருக்கு எவ்வளவு இடம் கிடைத்து பயனடைந்தார்கள் என்பதை முதல்வர் தெரிந்து கொள்ள வேண்டும். சொந்த பணத்தில் கட்சிக்கு செலவு செய்வதாக இருந்தால் செய்யுங்கள். வங்கி கணக்கில் பணம் போடுங்கள் என சிலர் சொல்வது என்னை ஆத்திரமடைய செய்கிறது. ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகளை வாங்கும் அளவிற்கு அமைப்புகள் நம்மிடம் உள்ளது.ஆனால் வாக்குகளை நம்மால் வாங்க முடியவில்லை.

வேலை செய்ய முடிந்தால் செய்யுங்கள் இல்லை என்றால் மற்றவருக்கு வழிவிடுங்கள்
முதல்வர் இந்த 10.5 விழுக்காடு விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க நாம் அவரை ஊக்குவிக்க வேண்டும், என்றார்.

இதனை தொடர்ந்து 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவை சட்ட பேரவையில் நிறைவேற்ற கோரி 7 பேர் குழு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்த பா.ம.க அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1385

    0

    0