ரேஷன் பொருட்கள் கொள்முதலில் ரூ.210 கோடி ஊழல்… இது வெறும் பருப்பு, பாமாயில் கணக்குதான்… இன்னும் இருக்கு ; அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
30 September 2022, 2:30 pm

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வந்த பொங்கல் பண்டிகைக்காக 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. பருப்புகளில் பூச்சிகளும், வெல்லம் உருகிய நிலையிலும் இருந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தகுதியில்லாத நிறுவனங்களுக்கு டெண்டரை வழங்கியதாகவும், இதன்மூலம் பலகோடி முறைகேடு ஏற்பட்டிருப்பதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வந்தன. இதைத் தொடர்ந்து, பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருந்ததை உறுதி செய்த முதலமைச்சர் ஸ்டாலின், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தும், அந்த நிறுவனங்களுக்கு இனி எந்த டெண்டரும் வழங்கப்படாதவாறு கருப்பு பட்டியலிலும் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கே மீண்டும் திமுக அரசு டெண்டர் ஒதுங்கியுள்ளதாகவும், இதன்மூலம் ரூ.210 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

Annamalai Condemned - Updatenews360

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து திமுக அரசு உத்தரவிட்டது.

தவறு செய்த எந்த நிறுவனத்தையும் தடை செய்யவில்லை. அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருந்தது.

பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில் ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும், கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான். இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள் என்ற வகையிலே, மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம்.

தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு தண்ணீர் தராமல், சொற்பத் தொகையை… அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப் படுத்துகிறது. இந்த ஊழல் வெளிச்சம் தான் விடியல் போல, எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Anirudh updates on Vidamuyarchiஅனிருத் வெளியிட்ட “விடாமுயற்சி” மாஸ் அப்டேட்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!
  • Views: - 539

    0

    0