27 திமுக புள்ளிகளுக்கு கச்சேரி இருக்கு.. மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ; தேதி குறித்த அண்ணாமலை… தமிழக அரசியலில் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan25 March 2023, 10:53 am
தமிழகத்தில் சாராயம் விற்றதாக 46 ஆயிரம் கோடி ரூபாய் இருப்பதாக தெரிவித்திருந்த திமுக அரசு அதிலிருந்து ஒரு 2000 கோடி கொடுத்தால் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்து விடலாம் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் தென்காசி இசக்கி மஹாலில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் தமிழகத்தில் சாராயம் விற்ற தொகை 46 ஆயிரம் கோடி இருப்பதாக திமுக அரசு தெரிவித்து இருப்பதாகவும், அதில் ஒரு 2000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு கடனாக வழங்கினால் போதும் எய்ம்ஸ் மருத்துவமனையை உடனடியாக கட்டி முடித்து விடலாம் என தெரிவித்தார்.
மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டாமல் இருக்க வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் எனவும் அதற்காகத்தான் செங்கலை திருடி செங்கல் திருடன் சென்று விட்டான் என அமைச்சர் உதயநிதியை அண்ணாமலை சாடினார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது:- வரும் ஏப்ரல் 14ம் தேதி திமுக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களின் சொத்துப் பட்டியலை வெளியிடப்போகிறோம். குறிப்பாக 27 திமுக பிரமுகர்களின் சொத்து மதிப்பை வெளியிடுவோம். அவர்களின் சொத்து மதிப்பு மட்டுமே 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய். தமிழ்நாட்டின் ஜிடிபி என்பது 25 லட்சம் கோடி. தமிழ்நாட்டின் மொத்த ஜிடிபியில் 10% இந்த 27 பேரின் கையில் இருக்கிறது. திமுகவில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று சொத்துகளை சம்பாதிக்க ஆரம்பித்துள்ளனர். துபாயில் நிறுவனம் நடத்துகிறார்கள், துறைமுகங்களை நடத்துகிறார்கள், லண்டனில் 3 நிறுவனங்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். எல்லா விவரங்களும் ஏப்ரல் 14ஆம் தேதி வரும்.
இந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு, ஊழலுக்கு எதிரான மாபெரும் திருவிழாவாக நடைபெறப் போகிறது. அன்றைக்கு இருக்கிறது கச்சேரி. அன்றைக்கு குறிப்பாக ஒத்த செங்கல் திருடனுக்கு கச்சேரி இருக்கிறது. அதன் பிறகு தமிழ்நாட்டில் அரசியல் புரட்சி நடக்கும். டீக்கடைகளில், பூக்கடைகளில், ஆடு மாடு மேய்ப்பவர்கள், பேருந்துகளில் கண்டெக்டர்கள் பேசுவார்கள். அதற்கு அப்புறம் இருக்கிறது பாஜகவின் அரசியல், எனக் கூறினார்.