விவசாயிகள் மீது அக்கறையே இல்ல.. இன்னும் எத்தனை ஆண்டுகள்தான் காக்க வைப்பீர்களோ.. திறனற்ற திமுக பதில் அளிக்குமா? அண்ணாமலை கேள்வி
Author: Babu Lakshmanan21 March 2023, 7:52 pm
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது நாளில் வேளாண் பட்ஜெட்டை வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தாலும், நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கு தேர்தலில் அளித்த வாக்குறுதியினை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்குவதாக திமுக வாக்குறுதி அளித்திருந்த நிலையில், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100 ஊக்கத்தொகை என்றும், பொதுரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.75 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கரும்பு விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதும் கரும்பு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழக அரசின் இந்த செயலுக்கு அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், “உணவளிக்கும் விவசாயிகள் செழித்தால், உலகம் செழிக்கும். ஆனால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 2500 ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ. 4000 ஆகவும் ‘உயர்த்துவோம்’ என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 3வது ஆண்டிலும், சற்றும் கவலையில்லாமல், விவசாயி நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது.
விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக பதில் அளிக்குமா?,” என தெரிவித்துள்ளார்.
0
0