அறிவிச்சது ரூ.5 லட்சம்… கொடுப்பது ரூ.2 லட்சமா..? CM வழங்கிய நிவாரணத்தை திருப்பிக் கொடுத்த மீனவர் மீது தாக்குதல் ; அண்ணாமலை கண்டனம்!!

Author: Babu Lakshmanan
4 March 2024, 4:35 pm

மயிலாடுதுறையில் நடந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய நிவாரணத்தை மீனவர் ஒருவர் திருப்பிக் கொடுத்ததால், திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டு, பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு, தலா 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கடந்த 2022 ஆம் ஆண்டு, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற விழாவில், இழப்பீடாக வெறும் 2 லட்சத்திற்கான காசோலை மட்டுமே வழங்கியதால் மீனவப் பெருமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பூம்புகாரைச் சேர்ந்த மீனவர் சகோதரர் திரு.ரமேஷ் அவர்கள், விழா மேடையிலேயே முதலமைச்சர் திரு.ஸ்டாலின் அவர்களிடம் இது குறித்துப் புகார் அளித்ததும், பின்னர், தனக்கு வழங்கப்பட்ட காசோலையை, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனிடம் மேடையிலேயே திருப்பிக் கொடுத்தததையும், விழா காணொளியில் காண முடிகிறது.

இதனை அடுத்து, மீனவர், சகோதரர் திரு ரமேஷ் அவர்களை, அங்கேயிருந்த திமுகவினர் தாக்கியுள்ளதாகவும் இதனைப் பதிவு செய்த தனியார் செய்தித் தொலைக்காட்சியின் காணொளிகளும், திமுகவினரால் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மத்தியில், திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, தமிழக மீனவர்கள், இலங்கை அரசால் கொல்லப்படுவதைக் கண்டும் காணாமல் இருந்த திமுக, தற்போது, திமுக அரசு வழங்குவதாகக் கூறிய இழப்பீடுத் தொகையைக் குறைவாகக் கொடுத்ததைக் கேள்வி கேட்ட மீனவர் மீது தாக்குதலும் நடத்தியிருப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொடர்ந்து தமிழக மீனவ சமுதாய மக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது திமுக.

உடனடியாக, மீனவர் திரு. ரமேஷ் அவர்களைத் தாக்கிய திமுக குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மீனவ சமூக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், அவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்த ரூ.5 லட்சம் இழப்பீடை வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Rajkumar Periyasamy Pan-India Film ஒரே படம் ஓஹோ-னு வாழ்க்கை…பாலிவுட்டில் களம் இறங்கிய அமரன் பட இயக்குனர்..!
  • Views: - 306

    0

    0