‘பாரு’க்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியாரின் பாடலை முதலமைச்சர் தப்பா புரிஞ்சுகிட்டாரோ? அண்ணாமலை நக்கல்!!!
Author: Udayachandran RadhaKrishnan28 November 2023, 3:57 pm
‘பாரு’க்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியாரின் பாடலை முதலமைச்சர் தப்பா புரிஞ்சுகிட்டாரோ? அண்ணாமலை நக்கல்!!!
‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற நடைபயணத்தின்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அண்ணாமலை, அமைச்சர் டிஆர்பி ராஜா, அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான டிஆர் பாலு ஆகியோரை கடுமையாக விமர்சித்தார்.
அண்ணாமலை பேசுகையில், “திருவாரூர் மாவட்டத்தில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 58,051 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 2,11,363 வீடுகளில் குழாயில் குடிநீர், 1,20,830 இலவச கழிப்பறைகள், 1,00,213 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 1,08,016 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பிரதமரின் மருத்துவ காப்பீடு, 58,143 விவசாயிகளுக்கு வருடம் 6000 ரூபாய், 3398 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி என லட்சக்கணக்கானோர் பலனடையும் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.
மகாகவி பாரதியார், பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாடியதை, முதலமைச்சர் ஸ்டாலின் தவறாக நினைத்துக் கொண்டு, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்.
மன்னார்குடி வடசேரியில் கடந்த 2010 ஆம் ஆண்டு, டி.ஆர்.பாலு சாராய ஆலை கருத்துக் கேட்பு கூட்டத்தில் மக்களைத் தாக்கிய கருப்பு தினம் இன்று வரை அனுசரிக்கப்படுகிறது.
ஆனால், திமுகவினர் சம்பாதிப்பதற்காக, சாராய விற்பனையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். எப்படி குளத்தில் இருக்கும் தண்ணீர் சூரியனால் உறிஞ்சப்படாமல் தாமரை இலை தடுக்கிறதோ, அதே போல, தமிழக மக்களின் நலன் திமுகவால் உறிஞ்சப்படாமல் பாஜக தடுக்கும். திமுக காங்கிரஸ் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் காவிரி பிரச்சினை எழும். குறித்த நேரத்தில் காவிரியில் தண்ணீர் வராததால், இந்த ஆண்டு நெல் மகசூல் 3 லட்சம் டன் குறைந்துள்ளது.
இதற்கு முழுக்க முழுக்க திமுகதான் பொறுப்பு. தஞ்சாவூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வெறும் 48% பாராளுமன்ற வருகையில், ஒரு கேள்வி கூட கேட்காமல், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் தன்னால்தான் வந்தது என்று கூறிக்கொள்வது நகைப்புக்குரியது.
2010 ஆம் ஆண்டு, மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்து, மீத்தேன் திட்டத்தைக் கொண்டு வந்தது தான் அவரும் டி.ஆர்.பாலுவும் செய்த சாதனை. பொதுமக்கள் எதிர்ப்புக்குப் பிறகு, வேறு வழியின்றி, மீத்தேன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது திமுக.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி தொகுதிக்கு கொடுத்த வாக்குறுதிகளான புறவழிச் சாலைகள், இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பெயரில் விவசாயக் கல்லூரி, மகளிர் அரசு கலை அறிவியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகரில் பிரம்மாண்ட உலகத்தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம் மற்றும் நீச்சல் குளம், மன்னார்குடி தொகுதியில் தென்பரை, எடகீழையூர், ராயபுரம், காளாச்சேரி, முக்குளம்சாத்தனூர், கர்ணாவூர் ஆகிய ஊராட்சிகளில் கால்நடை மருத்துவமனை என வாக்குறுதிகளை வாரி இறைத்தார். ஆனால் அவர் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.
டெல்டா பகுதியை தொடர்ந்து வஞ்சிக்கும் திமுக ஆட்சி அகற்றப்படவேண்டும். அதன் முதற்கட்டமாக, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி முழுமையாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சி தொடர, தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.” எனப் பேசியுள்ளார்.