‘இப்பவாது ஞாபகம் வந்துச்சே’.. குடும்ப தலைவிகளுக்கு நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000மாக வழங்குக : அண்ணாமலை வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
20 March 2023, 2:14 pm

மகளிருக்கான உரிமைத் தொகையில் நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000மாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் இல்லத்தரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்போடு இருந்து மாதம் ரூ.1000 உதவித்தொகை பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில், தகுதி வாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 வழங்கப்படும். செப்டம்பர் 15ஆம் தேதி முதல் இந்தத் தொகை வழங்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை வெளியிட்ட போது திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் பலத்த கரவொலி எழுப்பினர். இந்தத் திட்டத்திற்காக ரூ.7,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிருக்கான ரூ.1000 உரிமைத் தொகை குறித்து சட்டப்பேரவையில் திமுக அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது, அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்து விட்டு, தற்போது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மகளிருக்கான உரிமைத் தொகையில் நிலுவைத் தொகையுடன் சேர்த்து ரூ.29,000மாக அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும்.

அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 382

    0

    0