பாவம் அண்ணாமலைக்கு வேற வேலை இல்ல.. அதனால தான் இப்படி : அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan16 March 2023, 11:46 am
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கான கடன் தள்ளுபடிக்கான அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சுய உதவி குழுவினருக்கு கடன் தள்ளுபடிக்கான அட்டையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழக முதல்வர் தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியின் படி மகளிர் சுய உதவி குழுவினருக்கு விருதுநகர் மாவட்டத்தில் ரூ.33 கோடி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மீண்டும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தமிழக முதல்வரால் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
விவசாயம் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணியில் ஒரு மாதத்தில் முடிவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தகராறு செய்ததால்தான் அதிமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார். சிலிண்டர் விலை உயர்வுக்கும், தமிழக அரசுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என தெரிவித்தார்.