ஊழல் புகாரில் அமைச்சர்கள் சிக்குகிறார்களா…? அண்ணாமலையால் பரபரக்கும் அரசியல் களம்… பதற்றத்தில் தவிக்கும் திமுக..!!
Author: Babu Lakshmanan28 May 2022, 4:50 pm
அதிரடி
தமிழக பாஜக தலைவராக, அண்ணாமலை ஐபிஎஸ் கடந்தாண்டு ஜூலை மாதம் பதவியேற்றுக்கொண்டார். அப்போது முதலே அரசியலில் அவர் காட்டிவரும் சுறுசுறுப்பு வியப்பை அளிப்பதாக உள்ளது.
கடந்த 10 மாதங்களாக அவர் திமுக அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து கூறியும் வருகிறார்.
குறிப்பாக தனியார் மின் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு
4400 கோடி ரூபாய் மதிப்பில் செய்துகொண்ட ஒப்பந்த விவகாரம், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்புகளை
ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் செய்யும் நிறுவனத்திடம் மட்டுமே வாங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடப்பட்ட சுற்றறிக்கை, முதலமைச்சர் ஸ்டாலினின் மார்ச் மாத துபாய் தொழில் முதலீட்டு பயணம் போன்றவை குறித்து, அண்ணாமலையின் கடுமையான விமர்சனம் திமுக அரசுக்கும் அக்கட்சியின் தலைமைக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று மறுத்த தனியார் மின் நிறுவனம்
500 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப் போவதாகவும் அறிவித்தது.
அதேபோல ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும். அதற்காக அவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்புவோம் என்று திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிவித்தார். ஆனால் அப்படி எந்த நோட்டீஸ்களும் தனக்கு இதுவரை வரவில்லை என்று அண்ணாமலை ஊடகங்களில் மறுத்து வருகிறார்.
இது தவிர விருதுநகர், வேலூர், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த கூட்டுப் பாலியல் பலாத்காரம், விசாரணைக் கைதிகள் 5 பேர் மர்ம மரணம், கோவில்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படும் பகுதிகளில் விளிம்புநிலை மக்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிப்பு போன்றவற்றில் அவர் முன்னெடுத்த போராட்டங்களும் தமிழக மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
முற்றுகை போராட்டம்
இந்த நிலையில்தான், கடந்த வாரம் அவர் ஒரு முற்றுகை போராட்ட அறிவிப்பை வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையில் திமுக கூறியபடி லிட்டர் பெட்ரோலுக்கு 5 ரூபாயை குறைக்கவில்லை. 3 ரூபாய் மட்டுமே குறைத்தது. அதனால் இன்னும் இரண்டு ரூபாயை கூடுதலாக குறைத்திடவேண்டும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய் குறைப்பு, கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் என்ற வாக்குறுதிகளை 72 மணி நேரத்திற்குள் நிறைவேற்றவேண்டும்.
இல்லையென்றால் சென்னை கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை அறிவித்தார். அந்தக் காலக் கெடு முடித்து விட்டதால் வருகிற 31-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தற்போது கூறியிருக்கிறார்.
கடும் தாக்கு
மேலும் சென்னையில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டுவிட்டு டெல்லி திரும்பிய பிறகு திமுக அரசு மீது அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார். செய்தியாளர்களிடம் அவர், “பிரதமர் முன்னிலையில் ஸ்டாலின் பேசும்போது மத்திய அரசின் வரி வருவாயில் இருந்து தமிழகத்திற்கு 1.21 சதவீதம் மட்டுமே நிதியாக வழங்கப்படுவதாக கூறியது, அப்பட்டமான பொய்.
2021-22-ம் ஆண்டில் மத்திய அரசுக்கு 7.40 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைத்தது. அதிலிருந்து தமிழகத்துக்கு பிரித்துக் கொடுத்த தொகை 70 ஆயிரத்து189 கோடி ரூபாய். இதன் மூலம் மத்திய அரசின் வரி வருவாயில் தமிழக அரசு பெற்ற நிதி 9.4 சதவீதம். ஆனால் முதலமைச்சர் வேண்டுமென்றே அரசு விழாவில் தவறான தகவலை தெரிவித்திருக்கிறார்.
இந்த பொதுவிழாவில், கச்சத்தீவு மீட்பு, நீட் விவகாரம், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை குறித்து கோரிக்கைகளை எழுப்பி முதலமைச்சர் பேசியதும் அநாகரிகமானது.
அவருடைய அரசியல் கும்மிடிப்பூண்டி – கோபாலபுரம் வரை மட்டுமே. ஆனால் மோடியின் அரசியல் என்பது உலக அளவில் சென்றுவிட்டது. உலகின் சிறந்த தலைவராக மோடி திகழ்கிறார்.
அவரிடம் எப்படி பேச வேண்டும் என்று ஸ்டாலின் கற்றுக்கொள்ளவேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை ஸ்டாலின் கட்டிப்பிடித்தார். அவருக்கு முத்தம் மட்டுமே கொடுக்கவில்லை. இதுதான் அவரின் சாதனை” என்று கிண்டலாக சாடினார்.
ஊழல் பட்டியல்
அத்துடன் திமுக தலைமைக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு குண்டையும் அண்ணாமலை தூக்கிப் போட்டார். அது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
“இரண்டு தமிழக அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி ஜூன் முதல் வாரத்தில் ஒரு புத்தகம் வெளியிடுவோம். அந்த 2 அமைச்சர்களும் பதவி விலகும் அளவிற்கு 100 கோடி ரூபாயை தாண்டும் ஊழல் பற்றிய விஷயங்கள் அதில் இருக்கும்.
உங்கள் ஊழலை தொடர்ந்து வந்துகிட்டே இருப்போம். நீங்கள் திராவிட மாடல் பற்றி பேசப் பேச உங்கள் ஊழல் பற்றி நாங்கள் விரிவாக பேசுவோம். நம்பர் 1 முதலமைச்சர் என்றால் நீங்கள் எதற்கு நம்பர் 1 முதலமைச்சர் என்று இந்தியாவிற்கே தெரியும். அந்த 2 அமைச்சர்களும் பதவி விலகும் வரை விடமாட்டோம்” என்று அவர் ஆவேசமாக குறிப்பிட்டார்.
‘வேகமான வளர்ச்சி
“இதுவரை பாஜக தலைவர் அண்ணாமலை இவ்வளவு ஆக்ரோஷமாக பேசியது கிடையாது. ஆனால் தற்போது முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் வெளியிடுவேன் என்று அவர் கூறியிருப்பது சாதாரண விஷயமாக தெரியவில்லை” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் இதுபற்றி பேசும்போது, “அமைச்சர்கள் ஊழல் செய்ததற்கான ஆதாரத்தை ஜூன் மாதம் 3-ம் தேதி அண்ணாமலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பேச்சு உள்ளது. அதை மறுக்க வேண்டிய கட்டாயம் சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் ஏற்படும். இதனால் திமுக அரசு நெருக்கடிக்கு தள்ளப்படுகிற சூழலும் உருவாகலாம்.
ஏற்கனவே மாமல்லபுரத்தில், 6 ஆயிரம் ஏக்கரில் புதிய சட்டப்பேரவையை கட்ட திமுக அரசு முடிவு செய்து பணிகளை தொடங்க அரசாணை வெளியிட்டு இருப்பதாகவும், இதற்காக அப்பகுதியில் 6 அமைச்சர்கள் ஒவ்வொருவரும் 100 ஏக்கர் நிலத்தை பினாமி பெயரில் வாங்கி இருப்பதாகவும், அண்ணாமலை சில வாரங்களுக்கு முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.
கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பணம் சம்பாதிப்பதற்காக புதிய சட்டப் பேரவை கட்ட முயற்சிக்கின்றனர். இதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் ஆவேசமாக கூறியிருந்தார்.
இது சென்னை கோட்டை வட்டாரத்தில் அதிர்வலையையும் ஏற்படுத்தியது.
அரசின் கொள்கை முடிவுகள் எப்படி முதலில் பாஜக தலைவருக்கு கிடைக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பியது. அரசு அதிகாரிகளில் சிலர் அவருக்கு ரகசியமாக உதவி செய்யலாம் என்றும் கருதப்படுகிறது. அவர்கள் யார் என்பதை கண்டறியும் வேலைகள் ஒருபக்கம் நடப்பதாக கூறப்பட்டாலும் தற்போது 2 அமைச்சர்கள் மீது அண்ணாமலை வீசுப் போகும் ஊழல் குண்டு வெடிக்கும் பட்சத்தில் அது தமிழக அரசியலில் பெரியதொரு திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது, தமிழகத்தில் பாஜகவை அண்ணாமலை வேகமாக வளர்த்து வருகிறார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் திமுகவின் இடை நிலைத் தலைவர்களும், அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தினமும் அவர் மீது வசைமாரி பொழிகின்றனர்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.