அந்த மெஷின் ரூ.345 தான்… அறிவித்தபடி ரூ.10,000 மதிப்பிலான மெஷினை கொடுப்போம் ; விமர்சனங்களுக்கு பதில் கொடுத்த அண்ணாமலை!!
Author: Babu Lakshmanan22 December 2022, 6:37 pm
கோவையில் காது கேட்காத சிறுமிகளுக்கு வழங்கப்பட்ட காது கேட்கும் கருவியின் விலையை மாற்றி கூறியதாக எழுந்த விமர்சனங்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை சுந்தராபுரம் அருகே அரிமா சங்கம் மற்றும் பாஜக இணைந்து 100 நபர்களுக்கு செயற்கை கால், காது கேட்கும் கருவிகளை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
அப்போது, ரூ.345 மதிப்பிலான காது கேட்கும கருவியின் விலையை ரூ.10,000 என அண்ணாமலை மேடையில் கூறியுள்ளார். இது கடும் விமர்சனங்களை எழச் செய்தது.
குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலையை விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். அதாவது, சத்திரபதி சிவாஜி 1967ல் சென்னை வந்தார். 37 வயதுக்குள் படித்தது 20000 புத்தகம். கணுக்கால் தண்ணீரில் டைட்டானிக் ட்ராமா. 9 வருட சர்வீஸில் 2 லட்சம் கேஸ். 4 ஆடு வளர்த்து 5 லட்சம் வாட்ச். இன்று, ரூ.345/- மெஷின் 10,000 ரூபாய். ஐம்புலன்களிலும் பெரும் பொய்களே, எனக் கிண்டலடித்திருந்தார்.
இந்த நிலையில், விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதாவது,கோவை – சுந்தராபுரத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட காது கேட்கும் கருவியின் விலை ரூ.10,000 என அரிமா சங்கத்தின் இயக்குனர் கூறியதன் அடிப்படையில் மேடையில் அறிவிக்கப்பட்டது. அந்த கருவியின் விலை குறித்து வெளியான செய்திகளின் அடிப்படையில் விசாரித்ததில், அதன் மதிப்பு ரூ.350தான் என்ற உண்மை தெரிய வந்தது.
அடுத்த 72 மணிநேரத்திற்குள் 16 குழந்தைகள் உள்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை பாஜக வழங்கும்.
அது மட்டுமல்ல, 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 5000 ரூபாய் முதலீடாக பாஜக செய்யும்.
முதற்கட்டமாக இன்று 4 குழந்தைகளின் பெயரில் செல்வமகள்/PPF கணக்குகள் தொடங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 12 குழந்தைகளுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கணக்குகள் துவங்கப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும், என தெரிவித்தார்.