CM ஸ்டாலின் குடும்பத்திற்கு டார்கெட்.. நேரம் குறித்த அண்ணாமலை : DMK FILES என்ற பெயரில் வெளியிட்ட வீடியோ!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 12:17 pm

சென்னை : திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுவதாக அறிவித்திருந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியை மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல் மற்றும் தமிழக மின்வாரியத்தில் முறைகேடாக கோபாலபுரத்திற்கு நெருக்கமானவர்களுக்கு டெண்டர் வழங்கப்படுவதாக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் துபாய் பயணத்தை விமர்சித்த அண்ணாமலை, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதில் ஆவின் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்காமல் தனியார் துறைக்கு டெண்டர் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்ததாக திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநர் ஆர்என் ரவியிடம் கொடுத்தார்.

அதன்பின்னரும், அடுத்தடுத்து திமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்களை அண்ணாமலையும், பாஜகவினரும் சுமத்தி வருகின்றனர். இதனிடையே, அண்ணாமலையின் ரபேல் வாட்ச்சுக்கான பில்லை கேட்டு திமுகவினரும் பதில் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

இதற்கு அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஏப்., 14ம் தேதி திமுக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியிடுவதாகவும், அதோடு சேர்த்து வாட்ச்க்கான பில்லை வெளியிடுவதாகவும் கூறியிருந்தார். தற்போது நடைபெற்று வரும் ஆட்சி மட்டுமில்லாமல் கடந்த 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறினார்.

இதையடுத்து, நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், ஏப்.,14ம் தேதி ஊழல் திருவிழா இருப்பதாகவும், அதன்பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும் எனவும் அண்ணாமலை கூறி வந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலை தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகனும், அமைச்சருமான உதயநிதி, திமுக எம்பி கனிமொழி, அழகிரி உள்ளிட்டவர்களின் படங்களை பதிவிட்டு நாளை காலை 10.15 மணிக்கு திமுக ஃபைல்ஸ் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனை பாஜகவினர் தற்போது டிரெண்டாக்கி வருகின்றனர்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!