யார் இந்த பிளானை போட்டது..? அறிவாலயமா..? அதிகாரிகளா..? தமிழக அரசின் தேவையில்லாத வேலை இது… அண்ணாமலை காட்டம்…!!
Author: Babu Lakshmanan5 March 2022, 1:47 pm
சென்னை : உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர் உள்பட இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், தமிழகம் ஒரு தூது குழுவை அனுப்ப என்ன தேவை ஏற்பட்டது..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- உக்ரைன் நாட்டின் போர் சூழலில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்பதற்காக, பிரதமரின் சீரிய முயற்சியில், இந்திய அரசின் வெளிவிவகார துறையும், இந்திய விமான படையும், துாதரக அதிகாரிகளும், விமான போக்குவரத்து நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இந்த சூழலில், தமிழக மாணவர்களை மீட்க, மூன்று எம்.பி., ஒரு எம்.எல்.ஏவை, நான்கு நாடுகளுக்கு அனுப்ப, முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்திருப்பது, அறிவாலய திமுக அரசின் முதிர்ச்சி இன்மையை காட்டுகிறது. திமுக அரசின் ஏட்டுச் சுரக்காய் சிந்தனையை வெளிப்படுத்துகிறது. ரயில்வே, பாதுகாப்பு, துாதரகம் மற்றும் வெளியுறவு போன்ற மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள துறைகள், மாநில அதிகார எல்லைக்குள் வருகிறதா என்பது, அறிவாலயம் நபர்களுக்கு புரியவில்லை.
தமிழக அரசு அதிகாரிகளுக்குமா தெரியவில்லை ? வெளியுறவு துறையில் நீண்ட அனுபவம் மிக்க நான்கு மூத்த அமைச்சர்கள், இந்திய அரசின் சார்பில் நான்கு நாடுகளில் முகாமிட்டு, மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். உலக நாடுகளே வியக்கும்படி அனைத்து மாணவர்களையும் மீட்கும் நடவடிக்கையை, மத்திய அரசின் மீட்பு குழு சிறப்பாக செயல்படுத்தும் வேளையில், தமிழகம் ஒரு துாது குழுவை அனுப்ப என்ன தேவை ?
மாநிலங்களுக்கு சம்பந்தம் இல்லாத மீட்பு நடவடிக்கையிலும் தலையிட்டு, மாணவர்களின் உயிரோடு விளையாட, திமுக அரசு முடிவு செய்துள்ளது. இதையும் அரசியலாக்கும் முதல்வரின் பொறுப்பற்ற செயல், மீட்பு நடவடிக்கைக்கு இடையூறாகவே இருக்கும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
1
0