கட்டிய 8 மாதத்தில் 30 நிமிட மழைக்கே தாங்காத மேற்கூரை… மத்திய அரசின் திட்டங்களிலும் திமுக ஊழல் ; பொங்கி எழுந்த அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
23 May 2023, 11:36 am

நெல்லை வ.உ.சி. மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதன் மேற்கூரை நேற்று பெய்த கனமழைக்கு பெயர்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

கட்டிய 8 மாதங்களில் மைதானத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பெரும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில், தரமற்ற முறையில் மேற்கூரை கட்டியதே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

அந்த வகையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 14 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரை மணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது. இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், பெருவாரியான பணிகள் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகே துவங்கியுள்ளது.

Annamalai - Updatenews360

இந்த மைதானத்தை மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மை செயலாளரான அபூர்வா அவர்கள், 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வ.உ.சி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

8 மாத பயன்பாட்டிற்கு பிறகு இடிந்து விழுந்துள்ளது மேற்கூரை. யாரும் இல்லாத நேரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ஜல் ஜீவன் திட்டம் முதல் ஸ்மார்ட் சிட்டி திட்டம் என, அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திறனற்ற திமுக அரசு.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும் இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று
தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன், என தெரிவித்துள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!