நயினாரின் பேச்சால் எழுந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி.. சுமூகமான அதிமுக – பாஜக கூட்டணி : பக்காவாக பிரச்சனையை முடித்த அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
26 January 2022, 1:04 pm

சென்னை : அதிமுக எம்எல்ஏக்கள் குறித்து பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் அண்ணாமலை.

தஞ்சை கிறிஸ்துவ பள்ளியில் பயின்று வந்த பிளஸ் 2 மாணவி, மதமாற்ற நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற போது, இறுதியாக தனக்கு நேர்ந்த கதியை அதில் வாக்குமூலமாக கூறியிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் நீதி கேட்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 300 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், உடனடியாக மதமாற்ற தடை சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட முக்கிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பாஜக எம்எல்ஏ பேசினார். அப்போது, “சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை. எதிர்க்கட்சியாக இல்லாமலும் ஊடகங்களுக்கு தைரியமாக பேட்டி கொடுப்பவர் அண்ணாமலை மட்டுமே,” எனக் கூறியதாகக் சொல்லப்படுகிறது.
இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆண்மையோடு வெற்றி பெற்று காட்டுமாறு அதிமுகவினர் சவால் விடுத்து வந்தனர்.

இதனிடையே தனது கருத்து தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது, அதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக தலைமைக்கு கட்சி நிர்வாகிகள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, நயினார் நாகேந்திரனின் கருத்து பாஜவின் கருத்து அல்ல என்றும், இந்த விவகாரத்திற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளிடையே எழுந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது.

  • RJ Balaji Apologizes to Sivakarthikeyan சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட ஆர்.ஜே.பாலாஜி…எதற்குனு தெரியுமா..?
  • Views: - 3956

    0

    0