7ம் தேதி வரை WAIT பண்ணுங்க… அதிமுகவிடம் பேசியது இதுதான் : சஸ்பெண்ட்ஸ்-ஐ நீட்டிக்கும் அண்ணாமலை!!

Author: Babu Lakshmanan
3 February 2023, 2:04 pm

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவின் நிலைப்பாடு குறித்த சஸ்பெண்ட்ஸை நீட்டிக்கும் விதமாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. பாஜகவை தவிர ஏனைய கட்சிகள் வேட்பாளரை அறிவித்து பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தையும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும், பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தனித்தனியே சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது :-
மக்களிடம் முக ஸ்டாலின் அரசின் பிரபலம் குறைந்துவரும் சமயத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக அரசுக்கு எதிரான எதிர்ப்பு அலை மிகப்பெரிய அளவில் உள்ளது.

திமுக ஒரு குடும்பத்திற்காக உழைத்து வருகிறது. கட்டப்பஞ்சாயத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு திமுகவுக்கு எதிராக தமிழ் மக்கள் உள்ளனர் என்பதை காட்டுகிறது.
இன்று காலை எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் சந்தித்து ஈரோடு இடைத்தேர்தல், தமிழக பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தோம்.

எங்கள் தேசியபொதுச்செயலாளர் ஜேபி நட்டா சார்பாக சில தகவல்களை நான் இருவரிடமும் (ஈபிஎஸ், ஓபிஎஸ்) எடுத்துக் கூறினேன். நான் அவர்களிடம் தனித்தனியே என்ன கூறினேன் என்று இப்போதைக்கு உங்களிடம் கூற முடியாது. தமிழ்நாட்டின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட்டு திமுக கூட்டணி வேட்பாளரை வீழ்த்துங்கள் என்று ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருவரிடமும் கூறினோம். அதிமுகவை ஒன்றிணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அப்போது தான் நாம் திமுக கூட்டணியை வீழ்த்த முடியும், என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது :- விலைவாசி உயர்வால் மக்களிடம் திமுக கெட்ட பெயர் எடுத்துள்ளது.
தமிழகத்திற்கு தற்போது உறுதியான தேசிய ஜனநாயக கூட்டணி நிலையான அதிமுக, எனக் கூறினார்.

அப்போது, பாஜகவின் தற்போதைய நிலைப்பாடு பற்றி கேட்ட போது?, 7ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் இருப்பதனால், அதுவரை பொறுத்திருக்க வேண்டும். ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பாஜவிடமிருந்து எந்தவொரு முக்கியமான அறிவிப்பும் வெளியாகவில்லை. தனித்தனியாக இல்லாமல் ஒரே வேட்பாளர் நிறுத்த வேண்டும் என கூறியுள்ளோம், எனக் கூறினார்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 415

    0

    0