திமுக அமைச்சர்கள் ஒருவரை கூட விடமாட்டேன்.. கணக்கு கேட்பேன்.. யாரும் என்னிடம் இருந்து தப்ப முடியாது : அண்ணாமலை சூளுரை!!
Author: Babu Lakshmanan3 January 2023, 11:12 am
தருமபுரி ; திமுக அமைச்சர்கள் ஒருவர்களை கூட விடமாட்டேன் என்னிடமிருந்து அவர்கள் யாறும் தப்பிக்க முடியாது என பாஜக தலைவர் அண்ணாமலை தருமபுரியில் ஆவேசமாக பேசியுள்ளார்.
தருமபுரியில் பாஜக சார்பில் ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது :- இந்திய அளவில் பல இடங்களில் தருமபுரி மாவட்ட மக்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலைக்கு காரணம் திராவிட ஆட்சிகள் தான்.
தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், அவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 80 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே உள்ளன. தருமபுரி மாவட்டத்தில் ஜாதி அரசியல் செய்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
கொள்கை இல்லாத திமுகவுடன் ஒருபோதும் பாஜகவின் பயணம் இருக்காது. பாஜகவை கிண்டல் செய்யும் திமுக தன்னுடன் கூட்டணியில் உள்ள ஸ்டெப்னிகளை கழட்டி விட்டுவிட்டு 2024 மக்களவை தேர்தலில் எங்களுடன் மோதட்டும். அந்த தேர்தலில் 40ம் நமது என்று கூறி வரும் திமுகவுக்கு பூஜ்ஜியம் தான் கிடைக்கும்.
செங்கல் அரசியல் செய்யும் இளவரசர் உதயநிதி, அவரது தாத்தா மற்றும் அப்பா ஆட்சிகளில் தருமபுரிக்கு அறிவித்த சிப்காட் தொழிற்பேட்டையின் செங்கல்லை காட்டுவாரா? ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்ட நீர்நிலைகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்றி மாவட்ட வளர்ச்சிக்கு தமிழக அரசு வழிவகுக்க வேண்டும்.
பாஜகவை பார்த்து ஸ்டாலினுக்கு குளிர் ஜீரம் தொடங்கி விட்டது. திமுக அமைச்சர்கள் ஒருவர்களை கூட விடமாட்டேன். என்னிடமிருந்து அவர்கள் யாறும் தப்பிக்க முடியாது. அவர்கள் செய்த ஊழல்களுக்கு கணக்கு கேட்பேன். 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து பாஜக சார்பில் எம்.பி.க்களை தேர்வு செய்து அனுப்பினால், தான் தருமபுரி உட்பட தமிழகத்துக்கு வளர்ச்சி ஏற்படும்.
தொடர் ஏமாற்றங்களால் பாதிக்கப்பட்ட இளையோர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பும், ஏக்கமும் உள்ளது. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தவிர்த்தால் அந்த எதிர்பார்ப்பு மீண்டும் ஏமாற்றமாக மாறிவிடும். எனவே, தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். 10 ஆண்டுகளில் பாஜக அரசு செய்துள்ள ஆயிரம் ஆயிரம் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள், என பேசினார்.