தமிழகத்தில் மேலும் ஒரு லாக்அப் மரணமா..? மற்றொரு விசாரணை கைதி சிறையில் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் தராததால் அடித்தே கொலை என புகார்..!!

Author: Babu Lakshmanan
28 April 2022, 1:58 pm

சென்னையைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் விசாரணை கைதி சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் அப்பகுதியில் சாராய விற்பனையில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த 26ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில் திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் விசாரணைக்காக திருவண்ணாமலை அழைத்துச் சென்றுள்ளனர்.

விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுபடி திருவண்ணாமலை கிளைச் சிறையில் நேற்று முன்தினம் காலை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை அவருக்கு வலிப்பு நோய் வந்ததாக கூறி உறவினருக்கு காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 4 மணி அளவில் தங்கமணி உயிரிழந்ததாக உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் விசாரணைக்காக அழைத்துச் சென்று அவரை காவல்துறையினர் கடுமையாக தாக்கியதாகவும், இதன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த மரணம் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் சென்று புகார் அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது, காவல்துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கதவுகளை மூடியதுடன், அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்தனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே, 2 லட்சம் ரூபாய் கேட்டு போலீஸ் அதிகாரி மிரட்டியதாகவும், தர மறுத்ததால் தனது தந்தையை அடித்தே கொலை செய்துவிட்டதாக உயிரிழந்த தங்கமணியின் மகன் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இறந்தவரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த வாரம் விக்னேஷ் என்ற விசாரணை கைதி, சென்னை தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிபிசிஐடியும் விசாரணையும் தொடங்கியுள்ளது.

DMK Silent on Custodial Death of 25-year-old man, Family Alleges Torture |  NewsClick

இளைஞர் விக்னேஷ் உயிரிழந்த சம்பவத்திற்கு காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தான் பொறுப்பு என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், திருவண்ணாமலையில் இதுபோன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளித்துள்ளது.

சாத்தான்குளம், சென்னையை தொடர்ந்து திருவண்ணாமலையிலும் விசாரணைக் கைதி உயிரிழந்த சம்பவங்கள் இனியும் தொடராமல் இருக்க, குற்றம் செய்த காவலர்களுக்கு துணை போகாமல், சட்டம் தன் கடமையை செய்தால் மட்டுமே, அப்பாவிகளை அடித்து துன்புறுத்தும் எண்ணம் கொண்ட காவலர்களின் மனநிலையை மாற்ற முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 1289

    0

    0