ரூ.120 கோடியில் ஆடம்பர பங்களா….? அமைச்சரால் திமுக அரசுக்கு தலைவலி… செந்தில் பாலாஜி போல சிக்குவாரா….?

Author: Babu Lakshmanan
13 December 2023, 8:01 pm

IT, ED ரெய்டுகளில் அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் சிக்கிக் கொள்வது கடந்த மே மாதம் முதலே தொடர் கதையாக உள்ளது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, எ வ வேலு மற்றும் எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கௌதம சிகாமணி ஆகிய ஐந்து பேர் இதுவரை மத்திய அமைப்புகளின் விசாரணை வளையத்திற்குள் சென்றுள்ளனர்.

இவர்களின் வரிசையில் தமிழக கைத்தறித் துறை அமைச்சர் காந்தியும் விரைவில் இணைந்து விடும் சூழல் உருவாகி இருக்கிறது, என்கிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் ரெய்ட் நடத்தப்படுவதால் திமுக மேலிடம் ரொம்பவே அதிர்ந்துதான் போயிருக்கிறது. அதற்குள் இன்னொரு சோதனையா? என நொந்து நூடுல்ஸ் ஆகும் நிலைக்கு திமுக தள்ளப்பட்டு இருப்பதும் தெரிகிறது.

Senthil Balaji - Updatenews360

இப்படி மத்திய விசாரணை அமைப்புகள் தீவிர ரெய்டில் இறங்குவதற்கு முக்கிய காரணமே அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவருடைய தம்பி அசோக்குமாரும்தான் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரவலாகவே உண்டு.

முதலில் கடந்த மே மாத இறுதியில் கரூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சென்னை நகரங்களில் அசோக் குமார் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்கள் காட்டுமான அலுவலகங்கள், உறவினர்களின் வீடுகள் என வருமானவரித்துறையினர் 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது ஏராளமான முக்கிய ஆவணங்களும் அவர்களிடம் சிக்கியது. அதன் அடிப்படையில் அடுத்து அமலாக்கத் துறையும் களம் இறங்கியது.

குறிப்பாக கரூர் அருகேயுள்ள ராம் நகர் பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், அவருடைய மாமியார் தனது மனைவி நிர்மலாவுக்கு சீதனமாக அளித்ததாக கூறப்படும் 2.49 ஏக்கர் நிலத்தில் 300 கோடி ரூபாய் அளவிற்கு ஒரு பிரமாண்ட பங்களா கட்டி வந்த நிலையில் ED அதிகாரிகள் இந்த ரெய்டில் குதித்தனர். அந்த பங்களாவை உடனடியாக தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முடக்கியும் வைத்தனர். தவிர புதிய பங்களாவை விற்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடக்கூடாது என்று கரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு
ED கடிதமும் அனுப்பியது.

இதற்கிடையே ஜூன் 14ம் தேதி அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியது தொடர்பான சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் விசாரித்த ED அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையிலும் அடைத்தது.

இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் போலவே தமிழக கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தான் வசிக்கும் ராணிப்பேட்டை நகரின் மையப் பகுதியில் 120 கோடி ரூபாய் செலவில் சுமார் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று அடுக்குமாடிகளுடன் பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

https://twitter.com/AdmkNaresh/status/1734534679213256814?t=rmaPnz6GcueFbMWFqGzA0g&s=08

இச்செய்தியை புகைப்படங்களுடன் வெளியிட்டு அதிமுகவினரும்,பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரும் சமூக ஊடகங்களில் வைரலாக்கியும் வருகின்றனர்.

ராணிப்பேட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் அமைச்சர் கட்டும் இந்த பங்களாவின் கட்டுமான பணிகள் சுமார் 70 சதவீதம் வரை முடிந்துவிட்டது வெளிப்படையாகவே தெரிகிறது. இதே ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில்தான் அமைச்சரின் வீடும், ராணிப்பேட்டை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகமும் உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தான் கட்டி வரும் பிரமாண்ட பங்களா எந்த நேரமும் தன் கண்களில் தென்படும்படியாக அமைச்சர் காந்தி கட்டி வருவதை புரிந்துகொள்ள முடிகிறது.

இத்தனைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த ஆடம்பர பங்களா அமலாக்கத்துறை அதிகாரிகளால் முடக்கி வைக்கப்பட்ட பின்பே அமைச்சர் காந்தி தனது பிரமாண்ட பங்களாவின் கட்டுமான பணிகளை தொடங்கியாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எந்த நேரத்திலும் அமைச்சர் காந்திக்கு சொந்தமான இடங்களில் ரெய்டில் இறங்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் கட்டி வரும் புதிய ஆடம்பர பங்களா அதை உறுதி செய்வது போல அமைந்து விட்டிருக்கிறது. ஏனென்றால் அமைச்சர் காந்தி தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடைய பினாமி என்று கூறும் அளவிற்கு அந்த நெருக்கம் உண்டு என்றும் சொல்வார்கள்.

“துரைமுருகனை, ED மேற்கொண்ட மணல் கொள்ளை ரெய்ட் விவகாரத்தில் விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு முன்பாக அமைச்சர் காந்தி சிக்கிக் கொள்வார் போல் தெரிகிறது” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் 45 வருடங்களுக்கு முன்பு பெட்ரோல் பங்க்கில், சாதாரணதொரு ஊழியராக பணிபுரிந்த காந்தி பின்பு, ஒரு எலக்ட்ரிக் கடையில் பணியாற்றி இருக்கிறார். அதன் பிறகு அவர் கள்ளச்சாராயம் விற்பவராக சில காலம் இருந்துள்ளார் என்றும் கூறுவார்கள். ஆனால் திமுகவில் அடுத்தடுத்து உயர் பதவிகளுக்கு வந்து 1996ல் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏவாக ஆன பின்பு, அவருடைய பண பலம் பல
மடங்கு அதிகரித்து விட்டது என்கிறார்கள். 2021ல் துரைமுருகனின் ஆசியோடு
அமைச்சராக வேறு ஆகிவிட்டார். அமைச்சர் காந்திக்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

என்னதான் நாங்கள் முறைப்படி வருமான வரி செலுத்தி வருகிறோம் என்று இவர்கள் சாக்கு போக்கு கூறினாலும் 40, 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்சியில் சாதாரண நபர்களாக இருந்த இவர்களுக்கு மலைபோல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்துக்கள் குவிந்தது எப்படி?… தங்களது பதவி, அதிகாரங்களை வைத்துதானே இவர்கள் இதை சம்பாதித்திருக்கவேண்டும்? என்ற கேள்விகளும் இயல்பாகவே எழுகின்றன.

இந்தக் கேள்விகள் எல்லாம், சாதாரணமானவர்களிடமே எழுகிறது என்றால், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்பினர் இதை எளிதில் ஒதுக்கி விட மாட்டார்கள் என்பது நிச்சயம்.

ஏற்கனவே கண்கொத்தி பாம்பு போல காத்துக் கொண்டிருக்கும் மத்திய விசாரணை அமைப்புகளுக்கு இது போன்ற தகவல்கள் அல்வா கிடைத்தது போல ஆகும். எனவே நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திமுக தலைமைக்கு இன்னொரு பெரும் குடைச்சல் காத்திருக்கிறது என்பதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

பலமுறை சம்மன் அனுப்பியும், இதுவரை அமலாக்கத்துறையிடம் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் பிடிபடும் வரை இதுபோன்ற ரெய்டுகள் இனி வரிசை கட்டலாம்!

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 502

    0

    0