இலாகா மாற்றப்படும் மற்றொரு அமைச்சர்..? பூதாகரமாகும் ஊழல் குற்றச்சாட்டு.. Cm ஸ்டாலினின் அடுத்த ஆக்ஷன்…!!

Author: Babu Lakshmanan
16 April 2022, 3:58 pm

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது, ஊழலுக்கு இடமே இல்லை, யார் தவறு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

தந்தைக்கு பிறகு முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு நல்ல பாராட்டை பெற்றது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல், மின்சாரத்துறையின் டெண்டரின் ஊழல் என அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களை முதலமைச்சர் ஸ்டாலினின் அரசு எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

குறிப்பாக, போக்குவரத்துத் துறையில் பதவி உயர்வுக்கு லஞ்சம் வாங்கிய விவகாரம் பூதாகரத்தை கிளப்பியது. இதனால், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனை இலாகா மாற்றம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை எடுத்தார். ஆனால், தவறு செய்பவர்கள் மீது நீங்கள் எடுக்கும் கடுமையான நடவடிக்கை இலாகா மாற்றம்தானா..? என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

Against Rajakannappan - Updatenews360

இது ஒருபுறம் இருக்க, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக மற்றொரு அமைச்சர் இலாகா மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போக்குவரத்துத்துறையை தொடர்ந்து கரூரில் உள்ளாட்சி துறையில் ஊழல் சம்பவம் அம்பலமாகியிருப்பது அண்ணா அறிவாலயத்தை ஆட்டம் காணச் செய்தது. போடாத சாலைக்கு பில் போட்டு ரூ.3.50 கோடி முறைகேடு புகார் எழுந்தது.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரும் இந்த விவகாரத்தை விட்ட பாடில்லை. ஆட்சியரிடம் பல முறை புகார் கொடுத்த நிலையில், ஆளுநரை சந்திக்கப்போவதாக தடபுடலாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட என்ஜினியர், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் உள்பட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து, கரூர் விவகாரம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.

ஏற்கனவே, மின்சாரத்துறையில் ஊழல் முறைகேடு நடந்ததாகக் கூறி பாஜக தலைவர் அண்ணாமலை நெருக்கடி கொடுத்து வருகிறார். மற்றொரு பக்கம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டத்தில் போடாத சாலைக்கு பில்போட்டு முறைகேடு நடத்தியது அம்பலமாகியுள்ளதால், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதிமுக, அமமுக என அடுத்தடுத்து கட்சி தாவி, தற்போது திமுகவில் ஐக்கியமாகியுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் காட்டிய முக்கியத்துவமும், நெருக்கமும், ஆண்டாண்டு திமுகவிலேயே இருந்து வரும் நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை என்பது கடந்த கால அரசியல் நிகழ்வுகளில் வெட்ட வெளிச்சமானது.

Senthil Balaji - updatenews360

எதிர்கட்சிகளுக்கு மேலும் தீணி போட்டது போன்று, கரூரில் ஊழல் நடந்துள்ளதால், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திமுகவின் உண்மை தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்றும் சொல்லப்படுகிறது. மேலும், ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டுக்குள் அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளில் திமுக அரசு சிக்கி தவிப்பது, எதிர்காலத்தில் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆகவே, எப்படி அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகாவை முதலமைச்சர் ஸ்டாலின் மாற்றி அமைத்தாரோ, அதே போல, இந்த ஊழலில் இருந்து மக்களிடம் நல்ல பெயரை வாங்குவதற்காக, அமைச்சர் செந்தில் பாலாஜியை, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையிலிருந்து கைத்தறித்துறை மாற்ற உள்ளதாக மேல் மட்ட அளவில் ரகசியம் கசிய தொடங்கியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மதுவிலக்குத்துறையிலேயே அவரது சகோதரரின் பல கோடி முறைகேட்டினை திமுக ஆதரவு பெற்ற பிரபல வார இதழும் இரண்டு பக்க ஸ்பெஷல் கட்டுரைகளை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக போட்டுள்ளது. எனவே, அடுத்த அமைச்சரின் மீது முதலமைச்சர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவது வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 1313

    0

    0