பழிவாங்கும் நோக்கத்தோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 7:09 pm

பழிவாங்கும் நோக்கத்தோடு அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக முன்னாள் எம்.எல் ஏ. சத்யா பன்னீர் செல்வத்தின் கணவர் பன்னீர் செல்வம் கடந்த 2011 – 16 இடைப்பட்ட அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சித் தலைவராக பதவி வகித்து இருக்கிறார்.

அப்போது நகராட்சி பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பன்னீர்செல்வம், முன்னாள் பண்ருட்டி நகராட்சி ஆணையர் பெருமாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ரூ.20 லட்சம் டெண்டர் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவான நிலையில் இன்று காலை முதல் அவருக்கு தொடர்புடைய இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பண்ருட்டியில் உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வத்தின் வீடு உட்பட 4 இடங்கள், சென்னையில் உள்ள பண்ருட்டி முன்னாள் நகராட்சி ஆணையர் பெருமாளின் இடம் என மொத்தம் 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.

தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்தி வரும் இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டம், பண்ருட்டி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி சத்யா பன்னீர்செல்வம் அவர்கள் மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…