வெளியாகும் புதிய அறிவிப்புகள்? அமளியை கிளப்ப அதிமுக திட்டம்? இன்று கூடும் சட்டசபை!!
Author: Udayachandran RadhaKrishnan9 October 2023, 8:56 am
வெளியாகும் புதிய அறிவிப்புகள்? அமளியை கிளப்ப அதிமுக திட்டம்? இன்று கூடும் சட்டசபை!!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் முதல் ஏப்ரல் வரை சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த போது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அக்டோபர் 9-ம் தேதி(இன்று) சட்டப்பேரவை கூடுவதாக தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் கூடுகிறது. இந்த சூழ்நிலையில் தமிழக அரசியில் கடந்த 6 மாத காலத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று தொடங்கவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தொடர் கொலை, கொள்ளை நடப்பதாகவும் சட்டம் ஒழுங்கு மோசமடைந்திருப்பதாகவும் அதிமுக, பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. மேலும் காவிரி விவகாரத்தில் உரிய முறையில் தமிழகத்திற்கு தண்ணீர் பெற்றுத் தராத காரணத்தால் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை கூட்டத்தில் அதிமுக, பாஜக பிரச்சனை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. எனவே சட்டப்பேரவை எதிர்கட்சி துணை தலைவர் பதவிக்கான இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என அதிமுக சார்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் சட்டப்பேரவை இருக்கை ஒதுக்கீட்டில் சபாநாயகர் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென கூறப்படுகிறது.
எனவே வழக்கம் போல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்க்கு அருகருகே இருக்கையானது ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கூட்டணி கட்சியாக இருந்த அதிமுக- பாஜக பிரிந்துள்ள நிலையில், இன்றைய கூட்டத்தில் இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து செயல்படுமா.? அல்லது அரசுக்கு எதிராக தனித்தனியாக பிரச்சனை எழுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.