தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேளுங்க.. இல்லைனா எதிர்விளைவு சந்திக்க நேரிடும் : மோடிக்கு சீமான் எச்சரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2024, 8:41 pm

தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேளுங்க.. இல்லைனா எதிர்விளைவு சந்திக்க நேரிடும் : மோடிக்கு சீமான் எச்சரிக்கை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரிசாவில் தேர்தல் பரப்புரை செய்த பிரதமர் நரேந்திரமோடி, பூரி ஜெகந்நாதர் கோவிலினுடைய கருவூலத் திறவுகோல் தமிழ்நாட்டிலிருப்பதாகக் குற்றஞ்சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி, தனது அரசியல் தன் இலாபத்துக்காக பன்னிரண்டு கோடி தமிழ்த்தேசிய இன மக்களையும், அவர்களது வரலாற்றுத்தாயகமான தமிழ்நாட்டையும் கொச்சைப்படுத்திப் பேசியிருக்கும் இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது.

மேலும் படிக்க: ஸ்டிக்கர் ஒட்டுவதில் மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி.. உயர்நீதிமன்றம் போட்ட கண்டிஷன்!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகிற்கு நாகரீகத்தையும், பண்பாட்டையும், வாழ்வியல் நெறிமுறைகளையும் கற்றுத் தந்த மரபார்ந்த இனம் தமிழ்ப்பேரினமாகும். மானத்தையும், வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி, அறத்தின் வழிநின்று வாழ்கிற பெருங்கூட்டத்தினர் தமிழர்கள் நாங்கள். அத்தகைய இனக்கூட்டத்தின் மீது போகிறப் போக்கில் திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் பிரதமர் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும்.

தமிழ்நாட்டுக்குப் பரப்புரைக்கு வருகிறபோதெல்லாம் தமிழ்மொழியையும், தமிழர்களையும் புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி, ஒரிசாவில் தமிழர்களை இழிவாகக் காட்ட நினைக்கிறாரென்றால், எவ்வாறு இதனைச் சகித்துக் கொள்ள முடியும்? தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்துவிட்டதெனும் துணிவில், தனது உண்மை முகத்தை வெளிக்காட்டத் தொடங்குகிறாரா பிரதமர் மோடி? இவ்வளவு நாட்களாக இசுலாமிய மதவெறுப்பை உமிழ்ந்துப் பரப்புரை செய்தவர், இப்போது அத்தோடு சேர்த்து தமிழர் இன வெறுப்பையும் காட்டியிருப்பது மிகவும் கீழ்த்தரமானதாகும்.

ஆகவே, தமிழர்களைத் திருடர்கள் போல சித்தரிக்கும் விதமாகப் பேசிய நரேந்திரமோடி, தனது பேச்சினை உடனடியாகத் திரும்பப் பெற்று, ஒட்டுமொத்த தமிழர்களிடம் வெளிப்படையான மன்னிப்புக் கேட்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

இல்லையெனில், இதற்கான எதிர்விளைவுகளை வருங்காலத்தில் பாஜகவானது தமிழ்நாட்டில் எதிர்கொள்ள நேரிடுமென எச்சரிக்கிறேன்” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!