சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்பி உதயகுமார் நியமனம் : எடப்பாடி பழனிசாமியின் ‘பலே’ கணக்கு…!!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2022, 12:43 pm
சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கடந்த 17ஆம தேதி இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி கழக சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த ஓபிஎஸ்சும், ஆர்பி உதயகுமாரும் ஒரே சமூகத்தினர் என்பதால், விட்ட இடத்தை பிடிக்க எடப்பாடி பழனிசாமி பலே கணக்கு போட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.