நாட்டிலேயே சாலை விபத்துகளில் மிக அதிகமான மரணம் ஏற்படுவது தமிழகத்தில்தான். 2020ம் ஆண்டு கணக்குப்படி 45,484 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.
தமிழகத்தில் அதிகரிக்கும் விபத்து
அதிவேகம், தவறான வழியில் செல்லுதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, செல்போன் பேசிக்கொண்டே ஓட்டுவது போன்றவை பிரதான காரணங்களாக கூறப்படுகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை, நாட்கள் மற்றும் பண்டிகை காலத்திலும் விபத்துகள் அதிகம் நடக்கின்றன.
இதையடுத்து, தமிழகத்தில் சாலை போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை பல மடங்கு உயர்த்தி தமிழக அரசு அண்மையில் அரசாணை வெளியிட்டது.
விண்ணை பிளக்கும் அபராதம்
கடந்த 27ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய சட்டத்தின்படி, ‘ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோருக்கு அபராதம் 100 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் ஆகவும் செல்போனில் பேசியவாறு வாகனத்தை ஓட்டுபவருக்கு 1,000 ரூபாய் காரில் ‘சீட்’ பெல்ட் அணியாமல் பயணித்தால் 1,000 ரூபாய், ‘லைசென்சு’ இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் 500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாய் ஆயிரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் 100 ரூபாயிலிருந்து 500 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்பவருக்கும், பின்னால் அமர்ந்து செல்வோருக்கும் தலா 10 ரூபாய் ஆயிரம் அபராதம். ஆம்புலன்ஸ், தீயணைப்பு போன்ற அவசரகால வாகனங்களுக்கு வழி விடாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்.
கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஓட்டினால், அவர்களுடைய பெற்றோருக்கும் தண்டனை. மேலும், வாகனங்களுக்கான பதிவு ரத்து செய்யப்படுவதோடு, இந்தக் குற்றத்துக்காக 3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 25,000 ரூபாய் வரை அபராதம் போன்றவை இந்த சட்டத்தில் மிக முக்கியமானவை.
மதுவால் அதிகரிக்கும் விபத்து
“உண்மையிலேயே தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகம் நடப்பதற்கும் அதில் உயிரிழப்போர் எண்ணிக்கையில் நாட்டிலேயே தமிழகம் முதல் இடத்தில் இருப்பதற்கும் இன்னொரு முக்கிய காரணமும் உண்டு. அது இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வரும் மது அருந்தும் பழக்கம் என்றால் மிகை ஆகாது” என சமூக நல ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.
“சாலை விபத்துகளை தடுப்பதற்கு கடுமையான அபராதம் விதிப்பது ஏற்கக் கூடிய ஒன்றுதான். என்றாலும் கடந்த ஒன்றை ஆண்டுகளில் திமுக அரசு இதில் எந்த அளவிற்கு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், ஊடகங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலங்களில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு இருக்கவேண்டும்.
மதுவிருந்து இல்லாமல் ஞாயிறு இல்லை
ஏனென்றால் 18 வயது முதல் 36 வயது வரை உள்ள இளைஞர்களில் 39 சதவீதம் பேரிடம் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
வார விடுமுறை நாட்களில் தமிழக இளைஞர்களிடம் மது விருந்து இல்லாமல் எதுவுமே நடப்பதில்லை என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.
இது எதிர்காலத்தில் அவர்களுடைய குடும்ப வாழ்க்கையையும் சீரழித்தும் விடுகிறது. அதனால்தான் மது அருந்துவதற்காக பணம் கொடுக்காத தாய், தந்தை, மனைவி படுகொலை போன்ற செய்திகளை தினமும் படிக்க வேண்டிய அவல நிலை இன்று தமிழகத்தில் காணப்படுகிறது.
மதுவுக்கு அடிமை
தவிர மது போதைக்கு அடிமையானவர்கள் கொலை கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை போன்றவற்றில் ஈடுபட்டு சிறைக்கு சென்று கம்பி எண்ணும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
இதற்குக் காரணம் டாஸ்மாக் வருமானத்தை தமிழக அரசு பெரிதும் நம்பி இருப்பதுதான். இந்த ஆண்டு சுமார் 40,000 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதுக்கடை குறைக்க வேண்டும்
இந்த மதுபான கடைகளை படிப்படியாகவோ, உடனடியாகவோ மூடிவிட்டால் தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் பலியாவோர் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்காக குறைந்து விடும் என்று அடித்து சொல்லலாம். இதன் மூலம் மிகவும் கஷ்டத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களில் நிம்மதியும் பிறக்கும். அவர்களின் பொருளாதாரம் உயரும் என்பதும் நிச்சயம்.
2018ம் ஆண்டின் கணக்குப்படி தமிழகத்தில் 6823 டாஸ்மாக் மதுபான கடைகள் இருந்தன. 2016 அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்திருந்தார். அவருடைய மறைவுக்குப் பின்பு ஆட்சியை தொடர்ந்த எடப்பாடி பழனிசாமி 1290 மதுக்கடைகளை இழுத்து மூடினார்.
சொன்னது வேறு செய்வது வேறு
ஆனால் 2015ம் ஆண்டின் இறுதியில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய
திமுக தலைவர்களில் ஒருவரான கனிமொழி எம்பி “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையே மதுக்கடைகளை இழுத்து மூடுவதுதான். அது மட்டும் அல்ல. திமுக நிர்வாகிகள் தமிழகத்தில் நடத்தும் அத்தனை மதுபான தொழிற்சாலைகளும் இழுத்து மூடப்படும். ஏனென்றால் இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில்தான். இதற்கு முக்கிய காரணம், மதுபான கடைகளால் குடும்பங்களில் ஏற்படும் பொருளாதார சீர்குலைவுகள் என்பதை சொல்ல வேண்டியதில்லை” என்று அவர் பெண்களுக்காக கவலையோடு ஆவேசமாக கொந்தளித்தார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றைரை வருடங்களாகி விட்டது. டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அறிகுறி இதுவரை எதுவும் தென்படவில்லை. மாறாக அதன் மூலம் வருமானத்தை பெருக்கும் வாய்ப்புதான் உருவாக்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகள் மூடும் விவகாரத்தை பெண்களின் வாக்குகளைக் கவர மட்டும் பயன்படுத்தாமல், அதை தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும் கொண்டு வரவேண்டும்.
பூரண மதுவிலக்கு ஒன்றே சிறந்த வழி
தற்போது அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஓய்வெடுக்கும் நேரங்களில் நடத்துனர்களும், ஓட்டுநர்களும் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது வரவேற்கக் கூடிய ஒன்றுதான். இதுவும் விபத்துகளை தடுப்பதற்கு உரியதொரு சிறந்த நடவடிக்கைதான்.
அதேநேரம் மது அருந்தும் பழக்கம் இல்லாத இளைஞர்கள், தெரியாமல் போக்குவரத்து விதிகளை மீறி விட்டாலும் கூட விதிக்கப்படும் கடுமையான அபராத தொகையால் புலம்பத்தான் செய்வார்கள். அது அவர்களுக்கு ஒரு பெரும் பண இழப்பாகவும் அமையும்.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 1,290 கடைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது திமுக அரசு, அதைவிடக் கூடுதல் எண்ணிக்கையிலான டாஸ்மாக் கடைகளை மூடி, தங்களுடைய கடந்தகால ‘பூரண மதுவிலக்கு’ வாக்குறுதியை செயல்படுத்த வேண்டும் என்பதே தமிழக பெண்களின் எதிர்பார்ப்பு” என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.