ரூ.1000க்கு இவ்ளோ நிபந்தனைகளா?…திமுக கூட்டணியில் கொந்தளிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
16 July 2023, 7:50 pm

தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும் போதெல்லாம்
அது அரைகுறையாகவே இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக எதையும் நிறைவேற்றவில்லை என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் கடுமையான விமர்சனங்களை முன் வைப்பது வழக்கம்.

திமுகவை விளாசும் கூட்டணி கட்சிகள்

ஆனால் சமீப காலமாக திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளே தேர்தல் வாக்குறுதி தொடர்பாக ஆளும் திமுக அரசின் மீது மனம் குமுறியும், கொந்தளித்தும் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதை காண முடிகிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவ்வப்போது நெருக்கடியும் அளிக்கின்றன.

கடந்த மார்ச் மாதம், ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் நிலையில் அந்த வீடுகளில் உள்ள பல மின் இணைப்புகளையும் ஒரே இணைப்பாக மாற்றவேண்டும் என்ற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை தமிழக மின் வாரியம் நடைமுறைப்படுத்த முயன்றபோது அதற்கு மார்க்சிஸ்ட் முதலில் கடும் கண்டனம் தெரிவித்தது. அதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ், மதிமுக என்று திமுக கூட்டணியின் மற்ற கட்சிகளும் போர்க்கொடி உயர்த்தின. இதனால் வேறு வழியின்றி திமுக அரசு ‘யூ டேர்ன்’ அடிக்க நேர்ந்தது.

மேலும் திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியது போல மாதத்திற்கு ஒருமுறை மின் அளவீடு கணக்கெடுப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்
என்று மார்க்சிஸ்ட் இன்னொரு கோரிக்கையும் வைத்து முதலமைச்சர் ஸ்டாலினை எரிச்சலடைய வைத்தது.

கூட்டணி கட்சிகள் கண்டனம்

அதற்கு அடுத்து கடந்த ஏப்ரல் மாதம், மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் தினமும் 12 மணி நேர வேலை, வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை என்னும் திட்டத்தை அறிமுகம் செய்யும் அறிவிப்பை வெளியிட்ட போது அதற்கு அதிமுக, பாஜக, பாமக ஆகியவை தெரிவித்த கண்டனங்களுக்கு இணையாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசை வறுத்தெடுத்தன.

அதன் பிறகுதான் விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி போன்றவைகளும் வரிசை கட்டி கொதித்தெழுந்து இத்திட்டம் வேண்டவே வேண்டாம் என்று திமுக அரசுக்கு எதிராக முழக்கமிட்டன.

அடுத்ததாக இதோ, இப்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் தேர்தல் வாக்குறுதி வசமாக சிக்கிக் கொண்டு விட்டது. வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் திமுக அரசு இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு அதற்கான முன்னெடுப்புகளில் தீவிரமாக இறங்கியும் உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்படவும் உள்ளது.

மகளிர் தொகைக்கு நிபந்தனைகள்

இந்த உரிமைத்தொகையை பெறுவதற்கு மயக்கம் போட்டு விழ வைக்கும் அளவிற்கு சிக்கலான பல கிடுக்குப் பிடி நிபந்தனைகளும் விதிக்கப்பட்டு இருக்கின்றன.

2021ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டபோது அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று உறுதி அளித்துவிட்டு இப்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கூறுவது மிகப் பெரிய ஏமாற்று வேலை என்று அத்தனை எதிர்க்கட்சிகளும் திமுக அரசை சாடி வருகின்றன.

தற்போது இந்த கடும் நிபந்தனைகளை திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியும், விசிகவும் தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

அந்த முக்கிய நிபந்தனைகள் இவைதான்.

  • 2.5 லட்ச ரூபாய்க்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத்தொகை கிடைக்காது.
  • ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருக்கவேண்டும்.
  • முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை கிடைக்காது.
  • ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை மட்டுமே குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கவேண்டும்.

கே பாலகிருஷ்ணன் கண்டனம்

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
“மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு உதவித் தொகை கிடைக்காது என்ற நிபந்தனையை ஏற்கமுடியாது. விதவை ஓய்வூதியம், முதியோர் ஓய்வூதியம் பெறும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் பெறுபவர்கள் மாதாந்திர உதவித் தொகைக்கு தகுதியற்றவர்கள் என்பதும் ஏற்புடையது அல்ல.

மேலும், உரிமைத் தொகையின் கீழ் 1,000 ரூபாய் வழங்குவதில் அரசுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால், மற்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உதவிகளை அதிகரிக்கவேண்டும்.

எனவே பணம் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள சில நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யவேண்டும் “என்று முதலமைச்சரை வலியுறுத்தி இருக்கிறார்.

திருமாவளவன் கடும் எதிர்ப்பு

விசிக தலைவர் திருமாவளவனும் இதே கோரிக்கையை முன் வைத்திருக்கிறார். என்றபோதிலும் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சில முக்கிய நிபந்தனைகளை தேவையற்றது, தவிர்க்கக் கூடியது என்று விமர்சனம் செய்தது போல் அல்லாமல் தோழமையின் சுட்டுதல் போல அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன் கூறும்போது, “மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பயன்பெற வேண்டும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் அந்த வரையறைகளை வகுத்திருக்கலாம். அவை பரிசீலனைக்கு உரியது என்று கருதுகிறேன். பொதுமக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ப அந்த வரையறைகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வர வேண்டும். மக்களின் கோரிக்கைகளில் இருந்து அரசு மற்றும் அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். பொருளாதாரம் மட்டுமல்லாமல் பல அளவு கோளை வைத்திருக்கிறார்கள். அந்த அளவு கோலால் பெரும்பாலான பெண்களுக்கு அந்த உரிமைத் தொகையை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத  நிலையை ஏற்படுத்துவதாக கருதுகின்றனர். ஆகவே அவற்றில் சில தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

“கூட்டணி கட்சிகளே திமுக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கும் நிறைவேற்ற நினைக்கும் வாக்குறுதிகளுக்கும் முட்டுக்கட்டை போடும் விதமாக விமர்சனங்களை வைப்பது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிருப்தியை கொடுத்தாலும் கூட மார்க்சிஸ்ட்டும், விசிகவும் இவற்றை தேர்தல் கண்ணோட்டத்துடன் பார்க்கவும் செய்கின்றன என்பதுதான் உண்மை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

மக்களிடம் ஓட்டு கேட்க முடியாத சூழல்

“ஏனென்றால் ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக நாங்கள்தான் காலம் காலமாக குரல் கொடுத்து வருகிறோம் என்று இந்த இரு கட்சிகளின் தலைவர்களும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருகின்றனர். இதனால் திமுக அரசு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்காக விதித்துள்ள நிபந்தனைகள் தேர்தலின்போது ஏழை, எளிய மக்களிடம் ஓட்டு கேட்க முடியாத சூழலை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் இந்த கட்சிகளுக்கு வந்திருக்கும்.

மேலும் திமுக அரசு தனது எந்த வாக்குறுதியையும் இதுவரை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பது இன்னொரு காரணமாக இருக்கலாம்

மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் திட்டத்தை தொடங்கி வைத்தபோது சாதாரண மாநகர பேருந்துகள் என்று நிபந்தனை போட்டுவிட்டனர். இதனால் அரசு விரைவு மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம் என்பது பெண்களுக்கு கிடைக்காமலே போய்விட்டது.

வாக்குறுதி என்னாச்சு

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசலுக்கு நான்கு ரூபாயும் குறைப்போம் என்று அறிவித்தனர். ஆனால் பெட்ரோல் விலை மட்டும் லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் அடுத்து எப்போது மேலும் இரண்டு ரூபாயை குறைப்போம் என்பது பற்றிய அறிவிப்பே இன்னும் வெளியாகவில்லை. அதுமட்டுமல்ல டீசலுக்கு விலையை குறைக்கும் வாக்குறுதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. அது பற்றிய பேச்சையே காணோம்.

அதேபோலத்தான் கேஸ் சிலிண்டர் மானியம் 100 ரூபாய் என்ற வாக்குறுதியின் நிலையும் ஆகிப் போனது.

திக்குமுக்காடும் திமுக அரசு

ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை பெறும் திட்டத்திற்கு திமுக அரசு விதித்துள்ள கறார் நிபந்தனைகளைப் பார்த்தால் தமிழகத்தில் 35 லட்சம் முதல் 40 லட்சம் குடும்பத் தலைவிகளுக்குதான் பணமே கிடைக்கும் போல் தெரிகிறது.

இந்த கணக்கை மார்க்சிஸ்ட் கட்சியும் விசிக்கவும் போட்டு பார்த்து உதவிப் பணம் கிடைக்காத எஞ்சிய ஒரு கோடியே 60 லட்சம் குடும்பத் தலைவிகளின் வாக்குகள் விழாமல் போய்விட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்காது. அதனால் நமக்கும் சேர்த்து பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று கருதியோ என்னவோ பாலகிருஷ்ணனும், திருமாவளவனும் உரிமைத் தொகை பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறார்கள் என்றே கருதத் தோன்றுகிறது” என அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

இவர்கள் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல்தான் தெரிகிறது!

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 383

    0

    0