திமுக எம்பி – அமைச்சர் இடையே வாக்குவாதம் : சமாதானம் செய்ய சென்ற ஆட்சியரை தள்ளிவிட்டதால் பரபரப்பு.. வைரல் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan17 June 2023, 9:57 pm
ராமநாதபுரத்தில் இன்று முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா அரசு சார்பில் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் நவாஸ் கனி எம்.பிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் அவர் வருவதற்கு முன்பே அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் விழா தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த நவாஸ் கனி இதுகுறித்து ஆட்சியரிடம் கேள்வி எழுப்பி உள்ளார். இதை தொடர்ந்து அமைச்சர் ராஜ கண்ணப்பன், எம்.பி நவாஸ்கனி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்ய முயன்ற ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளிவிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் கண்காணிப்பாளரிடம் கலெக்டர் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவில் ஏற்கனவே மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த சூழலில் எம்.பியும், அமைச்சரும் நேருக்கு நேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.