ஆணையம் போட்ட அதிர்ச்சி குண்டு… சசிகலா, ஓபிஎஸ் திட்டம் பணால்.. திண்டாட்டத்தில் டிடிவி தினகரன்…!

Author: Babu Lakshmanan
19 October 2022, 5:52 pm

ஆறுமுகசாமி ஆணையம்

தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை யாருக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறதோ இல்லையோ, சசிகலாவை முழுமனதோடு இப்போது ஆதரிக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கு பேரிடியாக அமைந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

Arumugasamy - Updatenews360

ஏனென்றால் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதாவின் சமாதி முன்பாக தர்மயுத்தம் நடத்திய ஓ பன்னீர்செல்வம், அவருடைய மரணத்தில் மர்மம் இருக்கிறது அதுபற்றி விசாரித்தால்தான் உண்மை வெளியே வரும் என்று சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினார்.

இதைத்தொடர்ந்து 2017ம் ஆண்டின் இறுதியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

600 பக்க அறிக்கை

அந்த ஆணையம் இறுதியாக தமிழக அரசிடம் தாக்கல் செய்த 608 பக்க அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று வைக்கப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்த முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • ஜெயலலிதா 2016 டிசம்பர் 4-ம் தேதி பிற்பகல் 3.50 மணிக்கு மரணமடைந்து இருக்கிறார். ஆனால் அப்பல்லோ மருத்துவமனை டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவித்துள்ளது.
  • 2016 அக்டோபர் 11-ம் தேதி அமெரிக்க மருத்துவர் ஸ்டூவார்ட் ரஸ்ஸலால் பரிந்துரைக்கப்பட்ட ஆஞ்சியோ சிகிச்சை ஜெயலலிதாவுக்கு செய்யப்படவில்லை.
  • ஆஞ்சியோகிராம் செய்வதற்கு அடிப்படைத் தேவையான ரத்தத்தில் கிரியேடினின் அளவு சரியாக இருந்தும், ஏன் ஒத்திவைக்கப்பட்டது என்ற காரணமும் விளக்கப் படவில்லை.
  • ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவர் ரிச்சர்ட் பீலோ பரிந்துரை செய்தார். ஆனால் அதற்கு சசிகலா தடையாக இருந்துள்ளார்.
  • ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவர் எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது.
  • அப்பல்லோ மருத்துவமனையில் சசிகலா உறவினர்கள் 10க்கும் மேற்பட்ட அறைகளை ஆக்கிரமித்திருந்தனர்.
  • ஜெயலலிதாவிற்கு எந்தமாதிரியான சிகிச்சை தரப்பட்டது என்று பற்றி வெளிப்படையாக கூறவேயில்லை. அந்த ரகசியம் காக்கப்பட்டுள்ளது.
  • சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.
  • ஜெயலலிதா மறைந்தவுடன் காலம் தாழ்த்தாமல் முதலமைச்சர் பதவிக்கு தன்னைப் பொருத்திக் கொள்ள ஓபிஎஸ் தயாராக இருந்தார். ஜெயலலிதாவின் வாரிசாக ஓபிஎஸ் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது தற்செயலான நிகழ்வு அல்ல.
  • அதிகார மையத்தின் மர்ம சூழ்ச்சிகளால் கிடைத்த முதலமைச்சர் பதவி ஓபிஎஸ்க்கு நீண்ட காலம் நீடிக்கவில்லை. அப்பதவி பறிபோன ஏமாற்றத்தால் கோபமடைந்த ஓபிஎஸ் அரசியல் லாபத்துக்காக தர்மயுத்தம் தொடங்கினார்.
  • இந்த ஆணையம் அமைக்கப்பட்டதற்கான காரணங்களை ஓபிஎஸ் நிராகரித்துள்ள நிகழ்வு, ஒரு முக்கிய சாட்சி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு விரோதமாக மாறுவதை நினைவூட்டுகிறது. இது விசாரணை ஆணையத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அமைகிறது.
  • சசிகலா, டாக்டர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய தலைமை செயலாளர் ராமமோகன ராவ், அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஒய்.வி.சி.ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
  • அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம்.

இப்படிப் பல்வேறு குறைபாடுகளையும், குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஓபிஎஸ்

இதில் ஆச்சரியம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம் இந்த ஆணையத்தில் இரண்டு முறை ஆஜரான ஓ பன்னீர்செல்வத்திடம் 9 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2017 பிப்ரவரி மாதம் நடத்திய தர்ம யுத்தத்திற்கு நேர் எதிராக அவருடைய வாக்குமூலம் அமைந்திருந்தது.

Ops - Updatenews360

“ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ, அவரது குடும்பத்தினரோ சதித்திட்டம் எதுவும் தீட்டவில்லை. சசிகலா மீது தனிப்பட்ட முறையில் எனக்கு மரியாதை உண்டு.
ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதுகுறித்து பொதுமக்களிடம் சந்தேகம் இருந்ததால்தான் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை விடுத்தேன்” என்று ஓபிஎஸ் அப்படியே அந்தர் பல்டி அடித்தார்.

விசாரணை நல்லது

இதனால் குஷியான சசிகலா, இதுபற்றி அப்போது கூறுகையில், “ஓ.பன்னீர்செல்வம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். ஆறுமுகசாமி ஆணையம் ஆரம்பிக்கப்பட்டபோது கூட, இதில் உண்மை என்னவென்று தெரிய வேண்டும்; பொதுமக்களுக்கும் தெரிய வேண்டிய விஷயம். எனவே ஆணையம் விசாரிப்பது நல்லது என்றுதான் நான் ஆரம்பத்தில் இருந்து கூறிவந்தேன். அது இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. மக்கள் என்மீது சந்தேகித்ததாக நான் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அரசியலில் என்னைப் பிடிக்காமல் இருப்பவர்கள் கூட இந்த மாதிரி ஒரு சொல்லை ஆரம்பித்து வைத்திருக்கலாம், அப்படிதான் நான் நினைக்கிறேன்” என்று மகிழ்ச்சி பொங்க குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் அடுத்த ஏழே மாதங்களில் நிலைமை தலைகீழாகி விட்டது.

தவிடு பொடியான திட்டம்

“ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி அறிக்கை, ஓ பன்னீர் செல்வத்தின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கே வேட்டு வைத்து இருக்கிறது. இதிலிருந்து அவரும், அவருடைய ஆதரவாளர்களும் மீள்வதற்கு நீண்ட காலம் சட்டப் போராட்டம் நடத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம்” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் விசாரணை அறிக்கையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் 32 ஆண்டுகள் உடனிருந்த சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள் மீது பல்வேறு சந்தேகக் கேள்விகள் எழுப்பப் பட்டுள்ளது. அது குறித்த விசாரணையும் விரைவில் தொடங்கும் என்று தமிழக அரசும் அறிவித்திருக்கிறது.

மேலும் விசாரணை ஆணைய அறிக்கையில் இடம் பெற்றுள்ள பல தகவல்கள் தீவிரமான குற்றச்சாட்டாகவும் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

சசிகலா மற்றும் அவருடன் இருந்த உறவினர்கள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த தகவல்களுக்கு முற்றிலும் மாறாக இருப்பதால் அவருக்கு அவப்பெயர்தான் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பான விசாரணை இன்னும் சில ஆண்டுகளுக்கு நீடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் 3 பேரும் ஒன்றாக இணைந்து அதிமுகவை கைப்பற்ற நினைக்கும் முயற்சியும் தவிடு பொடியாகி போய்விட்டது.
இவர்களை ஒன்றாக இணைக்க துடிக்கும் தேசிய கட்சியின் பிரபல ஆடிட்டர் ஒருவருக்கும் இது பலத்த அடியாக விழுந்துள்ளது.

பின்னடைவு

ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை ஓ பன்னீர் செல்வத்தை விட சசிகலாவின் அக்காள் மகனும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரனையும் ஆழ்ந்த கவலையில் மூழ்க வைத்திருக்கிறது என்பதும் உண்மை.

மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் முதலமைச்சர் பதவிக்கான அதிகாரத்தை சசிகலாதான் முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். எங்களால் அவரை மீறி தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க இயலவில்லை என்று கூறி அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ்
அன்றைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகிய மூவரும் கூறி தப்பித்துக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர். அதனால் இதில் சிக்கல் சசிகலாவுக்கு மட்டும்தான் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

தவிர அடுத்த கட்ட விசாரணையின் போது யாராவது ஒருவர் கையை காட்டி விட்டால் கூட ஓபிஎஸ் சிக்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஏனென்றால் 2017ல், ஒரு கருத்தையும் 2022-ல் வேறொரு கருத்தையும் நீங்கள் கூறியது ஏன்? என்ற கிடுக்குப் பிடி கேள்வியும் அவரிடம் எழுப்பப்படலாம்.

OPS - Updatenews360

இதுபோன்ற நிலையில் அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும் என்று தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் ஓபிஎஸ் போடும் நாடகத்தை அவருடைய ஆதரவாளர்களே கூட இனி நம்ப மாட்டார்கள். அவருக்கு இது பெருத்த பின்னடைவாகவும் அமையும்.

ஏற்கனவே பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சொகுசு வாழ்க்கையை அனுபவிப்பதற்காக சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கு சசிகலா மீது உள்ள நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அவருக்கு மேலும் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

அதேநேரம் இன்றும் சசிகலாவை முழுக்க முழுக்க பின்னாலிருந்து இயக்கி வருபவர் டிடிவி தினகரன்தான் என்று கூறப்படுவது உண்டு. அவர்தான் தற்போது சசிகலா உள்பட ஆணைய அறிக்கையால் பாதிக்கப்பட்ட அனைவரும் சட்டரீதியாக எதிர்ப்பு நிலையை எடுப்பார்கள் என்கிறார். சசிகலாவின் பெயரை மட்டும் சொன்னால் தனது சித்தி என்பதற்காக பரிந்து பேசுகிறார் என்று மக்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று கருதி அவர் சாமர்த்தியமாக மற்றவர்களையும் இதில் சேர்த்துக் கொள்கிறார்”என்று அந்த அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!