அசோக்குமார் கைதால் திமுக அப்செட்! செந்தில்பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 7:16 pm

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை தங்களது கஸ்டடியில் ஐந்து நாட்கள் எடுத்து விசாரணை நடத்தியபோதுஅரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்குடன் சேர்த்து, அவர் பினாமி பெயர்களில் நிலம் வாங்கி குவித்ததாக பேசப்படும் விவகாரங்களையும் தோண்டித் துருவியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

செந்தில்பாலாஜியை திணறடித்த ED

அவருடைய தம்பி அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரில் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு பத்திர பதிவு செய்யப்பட்ட 2.49 ஏக்கர் நிலத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட பங்களா கட்டுவது குறித்துதான் 200க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.

30 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எப்படி அசோக்குமாரின் மாமியார் லட்சுமிக்கு 10 லட்ச ரூபாய்க்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது என்பன போன்ற கிடுக்குப் பிடி கேள்விகளையே அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு விதமாக எழுப்பி செந்தில் பாலாஜியை திணறடித்தனர் என்றும் தகவல்கள் பொதுவெளியில் பரவியது.

ஏனென்றால் இதில் முதற்கட்டமாக கரூரில் உள்ள பிரமாண்ட பங்களாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கவும் செய்ததால் இன்னும் எதிர்பார்ப்பு எகிறியது.

அடுக்கடுக்கான கேள்விகள்

அதேபோல திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன் தனது பினாமியாக செயல்பட்டதாக கூறப்படும் சாந்தி என்பவரிடம் கைப்பற்றிய சில ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 60 நில ஆவணங்கள் தொடர்பாகவும் துருவித் துருவி செந்தில் பாலாஜியிடம் அடுக்கடுக்கான கேள்விக்கணைகள் பாய்ந்தன என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஐந்து நாள் காவல் முடிந்து செந்தில் பாலாஜியை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பாக ஆகஸ்ட் 12ம் தேதி அமலக்கத்துறை மீண்டும் ஆஜர் படுத்தியதுடன் அவர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்தது.

ட்ரங்க பெட்டியில் ஆவணங்கள்

ஆனால் அதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் மட்டுமே இடம் பெற்றிருப்பதாக தெரிய வருகிறது. மற்றவர்கள் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
170 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் அதன் தொடர்புடைய 4 ஆயிரம் பக்கங்களைக் கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஆவணங்களும் ஒரு இரும்பு டிரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒப்படைத்து வியக்கவும் வைத்தனர்.

இதில் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான முகாந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் பட்டியலிடப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி விசாரணை நடத்திய போது, “காவலில் தன்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் துன்புறுத்தவில்லை” என அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவருக்கு வருகிற 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கனவிலும் நினைக்க முடியாத ‘ஜாமீன்’

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கில் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகையை முழுமையாக கோர்ட்டில் தாக்கல் செய்துவிட்டனர்.

இதனால் விரைவில் செந்தில் பாலாஜியை ஜாமீனில் எடுக்க திமுகவின் சட்டப்பிரிவு அணி வக்கீல்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஆனால் அவர்களால் ஜாமீன் பெற்று விட முடியுமா?…என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. “அது மிக மிகக் கடினமானது” என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

“பொதுவாக காவல்துறையால் கைது செய்யப்படும் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்போது, அவருக்கு ஜாமீன் எளிதில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், அமலாக்கத்துறையின் நடைமுறையே முற்றிலும் வேறானது.

அதிரடி காட்டிய அமலாக்கத்துறை

காரணம் ஒரு புகார் வந்தாலே சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையால் உடனே வழக்கு பதிவு செய்து விட முடியும். ஆனால், அமலாக்கத்துறை அப்படி அல்ல. எந்த வழக்காக இருந்தாலும் குற்றச் சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அவர்கள் வழக்கு பதிவு செய்வார்கள். அதாவது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்கிறது என்றாலே அங்கு குற்றம் நடந்திருப்பது உறுதியாகிவிட்டது என்றுதான் அர்த்தம் எனக் கூறப்படுவதும் உண்டு.

அதனால் அமலாக்கத்துறை தாக்கல் செய்யும் குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் மிகவும் உன்னிப்பாக அணுகும். மேலும் ஜாமீன் மனு மீதான விசாரணையில், அமலாக்கத்துறையின் வாதத்தை பெரிதாக கவனத்திலும் எடுத்துக் கொள்ளும்.

அமலாக்கத்துறை வழக்குகளில் பல அரசியல் தலைவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்ட நிகழ்வுகளே அதிகம். என்பதுதான் எதார்த்தமான உண்மை. மருத்துவ ரீதியான காரணமாக இருந்தால் மட்டுமே, அதுவும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்திய பிறகே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கும். எனவே, செந்தில் பாலாஜிக்கு அவ்வளவு எளிதாக ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை. இது திமுகவுக்கு அதிர்ச்சி தருவதாகவே அமையும்.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு சிக்கல்

அதிலும் குறிப்பாக, கடந்த மே மாதம் 16ம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து முடித்திருக்கிறது. தவிர ஜூன் 14ம் தேதி நடந்த அவர் மீதான கைது நடவடிக்கையும் அதையொட்டியே அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு மீண்டும் செப்டம்பர் 30ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர இருப்பதால் அன்று தமிழக அரசின் சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டதால் இனி மத்திய குற்றப் பிரிவு போலீசால் கூடுதல் கால அவகாசம் கேட்க முடியாத சூழலும் உருவாக்கப்பட்டுவிட்டது.

ஆடம்பர பங்களாவால் புதிய சிக்கல்

அதேநேரம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் தனது மனைவி பெயரில் கரூரில் பிரமாண்ட பங்களா கட்டிய விவகாரம், செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான வேடசந்தூர் திமுக நிர்வாகி சாமிநாதனின் பினாமியிடம் கைப்பற்றிய 60 நில ஆவணங்கள் மற்றும் அவர் மூலம் டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களில் செயல்படும் நிதி நிறுவனங்களுக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டது போன்ற விஷயங்களை அமலாக்கத்துறை இரண்டு தனித்தனி வழக்குகளாக பதிவு செய்யும் வாய்ப்புகளும் காணப்படுகிறது.

அப்போது செந்தில் பாலாஜியை மீண்டும் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்கவேண்டும். அதனால் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்ற வாதத்தையும் அமலாக்கத்துறை கோர்ட்டில் வைக்கலாம்.

இதற்காகவே கரூர் பிரமாண்ட பங்களா, திமுக நிர்வாகி சாமிநாதனின் பினாமியிடம் பறிமுதல் செய்த நில ஆவணங்கள் தொடர்பான விசாரணை குறித்த விவரங்களை அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் ஆகஸ்ட் 12ம் தேதி கோர்ட்டில் தாக்கல்
செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடவில்லை என்றே கருதத் தோன்றுகிறது.

இதனால் அமலாக்கத்துறை மிகவும் சாதுர்யமாக, திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதையும் காண முடிகிறது. இவற்றையெல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி பார்த்தால் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பது கடினமான ஒன்றாகவே தெரிகிறது” என்று அந்த சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கொச்சியில் அசோக்குமார் கைது

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில்தான் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று அங்கு தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரை சுற்றி வளைத்து கைது செய்து இருக்கிறார்கள்.

அசோக்குமாரை தேடி வருவது தொடர்பான ‘லுக் அவுட்’ நோட்டீசை நாட்டில் உள்ள அத்தனை விமான நிலையங்களுக்கும் அமலாக்கத் துறை அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் ஆகஸ்ட் 13ம் தேதி அதிகாலை கொச்சி விமான நிலையத்திற்கு வந்த அவரை அங்குள்ள அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டதுடன் பிடித்து வைத்து சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் இந்த கைது நடந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் அசோக்குமார் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அவரை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாட்கள் வரை தங்களுடைய காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரிக்க கூடும் எனத் தெரிய வருகிறது. இதற்கு நிச்சயம் கோர்ட் அனுமதி அளித்து விடும் என்றும் எதிர்பார்க்கலாம். ஏனென்றால் அசோக்குமாருக்கு நான்கு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பதால் அமலாக்கத்துறை கேட்கும் கால அவகாசத்தை தட்டாமல் கோர்ட் வழங்குவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

சூட்டோடு சூடாக ED அதிரடி

இதனால்தான் என்னவோ செந்தில் பாலாஜி மீதான வழக்கை முடித்த சூட்டோடு சூடாக அசோக்குமார் மீதான விசாரணையில் இறங்கி அவரை அதிரடியாக கைதும் செய்து தங்களது கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் தீவிரமாக அமலாக்கதுறையினர் ஈடுபட்டு இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்பு தலைமறைவான அசோக்குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பொறி வைத்து பிடித்துள்ளனர்.

இனி அவருடைய மனைவி நிர்மலா, மாமியார் லட்சுமி இருவரும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் எளிதாக வந்து விடுவார்கள். அதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, மீண்டும் ஒரு பெரிய தலைவலி உருவாகிவிட்டது
என்று சொல்லவேண்டும்!

ஏனென்றால் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு, கரூரில் கட்டிய பிரமாண்ட பங்களா என இரண்டு விவகாரங்களிலுமே அசோக்குமாரின் பெயர் அடிபடுவதால் செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல திமுக அரசுக்கும் இது குடைச்சல் கொடுக்கும் விவகாரமாக விஸ்வரூபம் எடுக்கலாம்.

என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 327

    1

    0