சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை விறுவிறு… திமுக எம்பி ஆ.ராசாவுக்கு நீதிமன்றம் சம்மன்…!!
Author: Babu Lakshmanan29 November 2022, 6:50 pm
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக திமுக எம்பி ஆ.ராசாவுக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஆ.ராசா உள்ளிட்ட பலர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் உண்மையில்லை என்றும், தேவையான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படவில்லை என நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் தினசரி விசாரணைக்கு அனுமதிக்கக்கோரி சிபிஐ வலியுறுத்தியுள்ளது. இது திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சொத்துகுவிப்பு வழக்கில் தனியாக ஆ. ராசா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பது அவருக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.
1999ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த காலகட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக எம்பி ஆ.ராசா மீது புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பலமுறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. 2ஜி வழக்கில் கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.
மொத்தம் 16 பேர் மீது அப்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
2015ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக ரூ 5.53 கோடி வரை சொத்து சேர்த்துள்ளதாக இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் மட்டுமின்றி மொத்தம் 5 பேர் மீது இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக வரும் டிசம்பர் 10ம் தேதி நேரில் ஆஜராகுமாறு திமுக எம்பி ஆ.ராசா மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் 4 பேருக்கு சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.