காலை 8 மணிக்கு மேல் ஆவின் பால் கிடைப்பதில்லை : தங்கு தடையின்றி கிடைக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? திமுக அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 12:16 pm
Quick Share

ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தை நுகர்வோர்களின் தேவைக்கேற்ப வழங்காத தி.மு.க. அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆவின் பால் மற்றும் இதர பால் உப பொருட்களின் விலை வெளிச் சந்தையைவிட குறைவு என்பதால், பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் ஆவின் பூத்துகளை நாடுகின்றனர்.

தற்போது ஆவின் பால் மற்றும் சில உப பொருட்கள் விநியோகத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தது.

அடுத்த சில மாதங்களிலேயே, அரை லிட்டர் தயிர் விலை 27 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகவும், ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை 515 ரூபாயிலிருந்து 535 ரூபாயாகவும், 200 கிராம் பாதாம் பவுடர் விலை 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டன.
ஐஸ்க்ரீம் வகைகளின் விலையும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இதனைக் கண்டித்து நான் அறிக்கை விடுத்ததோடு, உயர்த்தப்பட்ட விலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று நான் கோரிக்கை விடுத்தேன். இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஆவின் பால் முன்பைவிட குறைந்த அளவிலேயே ஆவின் பூத்துகளுக்கு விநியோகிக்கப்படுவதாகவும், காலை 8 மணிக்கு மேல் சென்றால் பால் இல்லை என்ற சூழ்நிலை நிலவுவதாகவும், சில சமயங்களில் ப்ரீமியம் பால் மட்டும் கிடைப்பதாகவும், இதன் காரணமாக சில்லரை விலையில் தினமும் பணம் கொடுத்து பால் வாங்கும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் எல்லாம் கூடுதல் விலை கொடுத்து தனியார் பாலை வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்லாமல், 100 கிராம், 200 கிராம் அளவிலான நெய் தற்போது ஆவின் பூத்துகளில் கிடைப்பதில்லை என்றும், 1 கிலோ நெய் தான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது என்றும், சில இடங்களில் 500 கிராம் நெய் விற்பனை செய்யப்படுகிறது என்றும், சிறிய அளவிலான பால்கோவா பெரும்பாலான ஆவின் பாலகங்களில் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களால் மொத்தமாக 540 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ நெய்யினை வாங்க இயலாது என்றும், சிறிய அளவிலான நெய் பாக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பால் விற்பனையின் அளவு சென்ற ஆண்டை விட தற்போது உயர்ந்திருக்கிறது என்று கூறி, இந்தக் குற்றச்சாட்டினை அரசு மறுக்கலாம். ஆனால், நுகர்வோர்களின் எண்ணிக்கை அதனை விட உயர்ந்துவிட்டது என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

ஆவின் பால் நுகர்வோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப பால் உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என்றும், 100 கிராம், 200 கிராம் அளவுகளில் பால் உப பொருட்களான நெய், பால்கோவா போன்றவை விற்பனை செய்யப்பட வேண்டுமென்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் இந்தக் கோரிக்கையினை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தமிழ்நாடு அரசுக்கு உண்டு. எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, பால் வகைகள் அனைத்தையும் தாராளமாக விநியோகம் செய்யவும், சிறிய அளவிலான பால் உப பொருட்கள் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • snehan recent news சம்பவம் செய்த சினேகன்…திகைத்து போன கன்னிகா..!என்னவா இருக்கும் ?
  • Views: - 605

    0

    0