தரமற்ற சாலை பணிகள்… முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை ஓடஓட விரட்டியடித்த திமுக நிர்வாகி..!! (வீடியோ)
Author: Babu Lakshmanan20 September 2022, 6:37 pm
கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே சாலை செப்பனிடும் பணியில் தரம் இல்லை எனக் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினரை, திமுக கிழக்கு மாவட்ட பொருளாளரும், சம்பந்தப்பட்ட சாலை பணி ஒப்பந்ததாரருமான கேட்சன் ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே இறச்சகுளம் பகுதியில் இருந்து துவரங்காடு பகுதி நோக்கி செல்லும் சாலை செப்பனிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை திமுக கிழக்கு மாவட்ட பொருளாளரும், அரசு ஒப்பந்ததாரருமான கேட்சன் என்பவர் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், சாலையை தரமற்ற முறையில் செப்பனிடுவதாக குற்றம் சாட்டியும், தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியதன்படி, பழைய சாலையை அகற்றாமல் தரமற்ற முறையில் செப்பனிடப்படுவதாகவும் கூறி, நாம் தமிழர் கட்சியினர், சாலை செப்பனிடம் பணி மேற்பார்வையில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாய் தகராறில் ஈடுபட்டனர்.
இதை அறிந்த சம்பந்தப்பட்ட சாலை பணியின் ஒப்பந்ததாரரும், திமுக கிழக்கு மாவட்ட பொருளாளருமான கேட்சன் மற்றும் தடிக்காரன்கோணம் ஊராட்சி தலைவரும், திமுக தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளருமான பிராங்க்ளின் ஆகியோர் தலைமையிலான கும்பல் நாம் தமிழர் கட்சியினரை ஓட ஓட விரட்டி அடித்தனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை தோவாளை வடக்கு ஒன்றிய செயலாளர் தலைவர் பிராங்கிளின் கன்னத்தில் அறைந்த காட்சியும் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தரமற்ற பணிகளை அரசியல் கட்சியினர் சுட்டிக்காட்டினால், அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட திமுக நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு டெண்டர்கள் சொந்த கட்சியினருக்கு கொடுப்பதால், இதுபோன்ற தரமற்ற பணிகள் நடப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.