ரோஸ் மில்க்கும் இல்ல… மாமூலும் இல்ல : அண்ணாமலை சொன்ன பகீர் புகார்… சென்னை காவல்துறை ரியாக்ஷன்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 November 2023, 4:59 pm

ரோஸ் மில்க் இல்ல… மாமூலும் இல்ல : அண்ணாமலை சொன்ன பகீர் புகார்… சென்னை காவல்துறை ரியாக்ஷன்!!

சென்னை திருமங்கலத்தில் உணவக மேலாளரை சிலர் அடித்து உதைத்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடர்பான வீடியோவை பகிர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார்.

மாமூல் பணம் தர மறுத்ததால் உணவக மேலாளரை ரவுடிகள் அடித்து உதைத்ததாக அவர் தெரிவித்திருந்தார். தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பெட்ரோல் குண்டுகள், மது மற்றும் போதையில் பட்டப்பகலில் நடந்த கொலைகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற வீதிகள், குண்டர்கள் கும்பல் அதிகரிப்பு ஆகியவையே ஊழல் திமுக அரசின் சாதனைகள். சென்னை திருமங்கலத்தில் மாமூல் பணம் தர மறுத்ததால் உணவக மேலாளரை ரவுடிகள் அடித்து உதைத்துள்ளனர்.

உணவக உரிமையாளர் இதுகுறித்து புகார் அளித்தும் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களைக் காவல்துறை கைது செய்யவில்லை என்று அறியப்படுகிறது. இது மக்களைப் பாதுகாப்பற்ற நிலைக்கு கொண்டு செல்ல திமுக அரசு விரும்புகிறது என்பதையே காட்டுகிறது” என்று தெரிவித்திருந்தார் அண்ணாமலை.

அண்ணாமலையின் இந்த பதிவை குறிப்பிட்டு, திமுக, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மாநகர காவல்துறை எக்ஸ் சமூக வலைதள ஐ.டி.க்களை மென்ஷன் செய்த நெட்டிசன் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு சென்னை காவல்துறை தரப்பில் எக்ஸ் தளத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வெளியிட்டுள்ள பதிவில், காமதேனு ரோஸ்மில்க் கடையின் ஊழியர் கணேசன் என்பவரிடமிருந்து புகார் வந்தது. ஜெட்சன் என்பவர், 12.11.2023 அன்று இரவு தங்களின் கடை அருகே வந்து அவரது நண்பர்களுடன் தகராறில் ஈடுபட்டு ஊழியரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வி-5 திருமங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஜெட்சன் அருகிலுள்ள உணவகத்தின் முன்னாள் ஊழியர் என்பதும், கணேசனின் கீழ் பணிபுரியும் பையனை ஜெட்சன் தாக்கிய விவகாரத்தில் ஜெட்சனுக்கும் கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின்போது பதிவான வீடியோ காட்சிகளும், இதை உறுதிப்படுத்துகிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் மாமூல் கேட்கப்பட்டதாக கூறுவது, அடிப்படை ஆதாரமற்றது.

மேலும் பாதிக்கப்பட்ட நபரான கணேசன் அளித்த புகாரில் அப்படி எதுவும் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 372

    0

    0