விஜய்க்கு 5 நாட்கள் கெடு.. கிடுக்குப்பிடி போட்ட பகுஜன் சமாஜ்.. என்ன செய்யப் போகிறது தவெக?

Author: Hariharasudhan
19 October 2024, 8:26 pm

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியிலிருந்து யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது வரை பாக்ஸ் ஆபிஸ் கிங்காக ஜொலித்து வருபவர் நடிகர் விஜய். இவர் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். அதை நேரம், 2026 சட்டமன்றத் தேர்தலே தங்களது இலக்கு என்றும் அவர் ஆணித்தரமாக அறிவித்தார்.

அதன்படியே, 2024 மக்களவைத் தேர்தலிலும், அதன் பிறகு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத் தேர்தலிலும் அக்கட்சி தரப்பில் யாருக்கும் ஆதரவும் இல்லை, போட்டியும் இல்லை என அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி மற்றும் கட்சிப் பாடலை விஜய் வெளியிட்டார்.

இவ்வாறு வெளியான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இரண்டு யானைகள், வாகை மலர், நட்சத்திரங்கள் ஆகியவை சிகப்பு, மஞ்சள் நிறத்திலான கொடியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறு கொடி அறிமுகப்படுத்திய போது, பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில், தங்களது சின்னத்தை பயன்படுத்த விஜய்க்கு அனுமதியில்லை என கூறியது.

BSP

அதேநேரம், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தையும் பகுஜன் சமாஜ் கட்சி அணுகியது. ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிடாது என மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே சற்று நிம்மதி அடைந்திருந்த தவெகவிற்கு தற்போது மீண்டும் பிரச்னை உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: ’இந்தி இசை’..ஸ்டாலின் இப்படி செய்திருக்கலாம்.. தமிழிசை அடுக்கடுக்கான கேள்வி!

ஏனென்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் உள்ள யானை சின்னத்தை ஐந்து நாட்களுக்குள் நீக்க வேண்டும் எனவும், அவ்வாறு நீக்கப்படவில்லை என்றால், அதன் கட்சித் தலைவர் விஜய் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் அணி துணைத் தலைவர் சந்தீப் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தற்போது விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், வருகிற அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில், 85 ஏக்கர் பரப்பளவில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் இப்படியான ஒரு சட்ட சிக்கலை விஜய் எதிர் கொண்டுள்ளார். இதனை அவர் எவ்வாறு சமாளிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!