(ஆ)சாமியார்களை சந்திப்பது தனி மனித விருப்பம்.. ஆனா சுயமரியாதையை இழக்க கூடாது : பங்காரு – அமைச்சர் சந்திப்பு குறித்து திமுக எம்பி சர்ச்சை!!
Author: Udayachandran RadhaKrishnan13 March 2022, 1:50 pm
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். மேல்மருவத்தூர் என்றாலே அனைவருக்கும் பரிட்சயமானது ஆதிபராசக்தி சித்த பீடம்தான்.
இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள், குறிப்பாக அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, சிபிஎஸ்இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகம் உள்ளிட்டவை இயங்குகிறது.
இந்த கோவிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் என பல்வேறு அசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு பிரபலங்களும் வந்து செல்வது வாடிக்கையான ஒன்று.
இந்த நிலையில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் அமைய முழு காரணமாக இருந்த பங்காரு அடிகளாரின் 81வது பிறந்தநாள் கடந்த 3ம் தேதி கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு முக்கிய பிரமுகர்கள் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட ஆளுநர் தமிமிழசை அவர்கள், பங்காரு அடிகளாரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பிறந்தநாள் முடிந்தும் தெடர்ச்சியாக பங்காரு அடிகளாரை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திமுக முதன்மை செயலாளரும், நகர்ப்புற அமைச்சரும், திமுக மூத்த தலைவருமான கே.என் நேரு கடந்த சில நாட்களுக்கு முன் பங்காரு அடிகளாரை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார்.
வாழ்த்த வந்த அமைச்சர் நேருவிற்கு சந்தன மாலை அணிவித்து பங்காரு அடிகளார் மரியாதை செலுத்தினார், மேலும் அடிகளாருடன் பேசும் போது, அடிகளார் நாற்காலியிலும், அமைச்சர் நேரு தரையில் அமர்ந்து பேசினர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை. So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம், பெரியார், அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே… என பதிவு செய்துள்ளார்.
திமுக இயக்கத்தை காத்தவர்களை அமைச்சர் அவமதித்தாக திமுக எம்பியின் ட்விட் உள்ளது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.