ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. எடப்பாடி பழனிசாமிக்கு 24 மணி நேரம் கெடு : தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 11:09 am

ஆதாரமற்ற குற்றச்சாட்டு.. எடப்பாடி பழனிசாமிக்கு 24 மணி நேரம் கெடு : தயாநிதி மாறன் பரபரப்பு அறிக்கை!

அண்மையில் மத்திய சென்னை தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி தயாநிதி மாறன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி இருந்தார்.

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தன் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வேண்டுமென்றே தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டது என திமுக மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என் மீது சுமத்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எனது கண்டனத்தைப் பதிவு செய்கிறேன்.

மேலும் எங்களது அரசியல் செயல்பாடுகள் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கருத்தில் கொண்டும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு மிகுந்த பொறுப்புடன் நான் பதிலளிக்க விரும்புகிறேன்.

கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட எழும்பூர், புரசைவாக்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, வேண்டுமென்றே எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டது.

எனது மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் பொது தளத்தில் கிடைக்கின்றன. அதை வேண்டுமென்றே தவிர்த்து, தவறான தகவல்களையும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் மக்களிடம் பரப்புவது மூலம், பொதுவெளியில் மக்களிடம் பேசுவதற்கான அடிப்படை தரத்தையும், குறைந்தபட்ச நாகரிகத்தையும் எடப்பாடி பழனிசாமி இழந்துவிட்டார்.

ஒரு மக்கள் பிரதிநிதியே இப்படி தரம் தாழ்ந்து நடந்துகொள்வது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இச்சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமி தனது தவறான பேச்சை திரும்பப் பெறுவதோடு, பொதுவெளியில் மக்களிடத்தில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

இதில் எந்த சமரசமும் கிடையாது. அவ்வாறு மன்னிப்பு கோராவிட்டால், எனது நேர்மை மற்றும் உண்மையைப் பாதுகாக்க அனைத்து சட்ட வழிகளையும் பின்பற்ற நான் தயாராக இருக்கிறேன்.

பொது சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு நவீன பொதுக்கழிப்பிடங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் கல்வி உட்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பல்நோக்கு கட்டிடங்கள் மற்றும் சமூக நலக்கூடங்கள் மூலம் ஏழை, எளிய மற்றும் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை செய்யப்பட்டுள்ளன.

மேலும் நகர்ப்புற மருத்துவமனைகளுக்கு நவீன மருத்துவ உபகரணங்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்யும் வகையில், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துதல், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் என் தொகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நான் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களின் பட்டியல் அனைத்தும் அரசாங்க பதிவேட்டிலும், பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வகையில், பொதுதளத்திலும் இருக்கின்றன.

அப்படி இருக்கையில், அனைத்துத் தரவுகளையும் எளிதில் திரட்டி, சரிபார்க்கக் கூடிய வாய்ப்பைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி போன்றோர், எதையும் ஆராயாமல், 2024 பொதுத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், இப்படி ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டை அவர் எப்படி முன்வைக்க முடியும் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

நாம் முன்னேற்றத்தை நோக்கி செல்லும்போது, தவறான தகவல்கள் மூலம் ஏற்படும் சவால்களால் திசை திருப்பப்படாமல், வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையுடன் தொடர்ந்து பணியாற்றுவதற்கான எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக நிற்கிறேன்.

நமது ஜனநாயக விழுமியங்களும், நீதித்துறை அமைப்பும் தொடர்ந்து உண்மையைப் பாதுகாத்து நீதியை நிலைநாட்டும் என்று நம்புகிறேன். மேலும் எடப்பாடி பழனிசாமி, தனது தவறான அறிக்கையை திரும்பப் பெறுவதுடன், உடனடியாக பொதுவெளியில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன்.

அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கத் தவறினால் அவர் மீதான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் தொடர நான் தயாராக இருக்கிறேன்” என தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 227

    0

    0