பீஸ்ட் படத்தில் இந்தி எதிர்ப்பு வசனம்… பாஜகவின் அடுத்த திட்டம் என்ன…? அண்ணாமலை காட்டிய அதிரடி ..!!

Author: Babu Lakshmanan
14 April 2022, 1:51 pm
Quick Share

பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி வசனம் பற்றிய கேள்விக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் விஜய் நடித்த இந்த படத்தில் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப் படம் நாடு முழுவதும் திரையரங்கில் நேற்று வெளியானது.

படம் குறித்து பல்வேறு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதில், இடம்பெற்றுள்ள ஒவ்வொரு காட்சிகள் பற்றியும் கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இப்படியிருக்கையில், பீஸ்ட் திரைப்படத்தில் இந்தி மொழி குறித்து இடம்பெற்றுள்ள வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இத்திரைப்படத்தில் உள்ள காட்சி ஒன்றில் “உங்களுக்கு மொழிமாற்றம் செய்ய, தான் இந்தி கற்றுக்கொள்ள முடியாது எனவும், தேவை என்றால் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்” என்றும் நடிகர் விஜய் பேசியுள்ளார். மேலும், காவிக் கொடியை கிழித்துக் கொண்டு என்ட்ரி கொடுப்பது போன்ற காட்சியும் இடம்பெற்று, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 132வது அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி சென்னை – கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அப்போது, பீஸ்ட் படத்தில் இந்தி குறித்த வசனம் இடம்பெற்றிருப்பது குறித்து அண்ணாமலையிடம் நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் பதிலளித்ததாவது :- படங்கள் என்றால் ஆயிரத்து எட்டு கருத்துக்கள் வரும். படத்தை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதேபோல, இந்தப் படத்தில் பலர் பல கருத்துக்களை சொல்வார்கள். அதனை விடுங்க.

தக்ஷன் பாரத்தின் கலை விழாவில் இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. திரையுலகில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் கூட அதில் கலந்து கொண்டனர்.

தமிழக பாஜகவுக்கும், திரையுலக நட்சத்திரங்களுக்கும் அற்புதமான பந்தம் உள்ளது. படத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருந்தால் அதனை படமாகத்தான் பார்க்க வேண்டும். அதேபோல, இந்தியை பொறுத்தவரையில், இந்தி திணிப்பு இல்லை என்று பிரதமர் மோடியே சொல்லிவிட்ட நிலையில், அதனை வைத்து அரசியல் செய்கிறார்கள். அதனைத்தான் நீங்கள் கேட்க வேண்டும், எனக் கூறினார்.

இதன்மூலம், பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள இந்தி வசனத்திற்கு எதிராக பாஜக அடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காது என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்திவிட்டார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 1242

    0

    0