திருட்டுத்தனமாக கையெழுத்து…. கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது திமுகவினர் தான் ; ஆதாரத்தை வெளியிட்ட பாஜக..!!

Author: Babu Lakshmanan
27 October 2023, 8:28 am

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே திமுகவினர் தான் என்று அமைச்சர் ரகுபதிக்கு ஆதாரத்துடன் பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த 25ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த இரண்டு நாட்களில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிறையில் இருந்த கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே பாஜகவினர் தான் என்று அமைச்சர் ரகுபதி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட X தளப்பதிவில், ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத் என்ற கருக்கா வினோத் மீது ஏற்கனவே பல வழக்குகள் இருக்கிறது. இவரை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது. இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது,” என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமைச்சர் ரகுபதியின் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக பாஜக, கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்ததே திமுக தான் என்று ஆதாரத்தையும் வெளியிட்டிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய நபரை இதற்கு முன் ஜாமீனில் எடுத்த திமுகவினர். ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார்.

அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது.

தன் மீதே பல ஊழல் குற்றச்சாட்டுக்களை வைத்துக்கொண்டு, ஊழல் தடுப்புப் பிரிவைக் கையாளும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மூன்றாம்தர இணைய ஊடகங்களைப் போல பொய்ச் செய்திகளைப் பரப்பிக் கொண்டு இருக்கிறார்.

நீதிமன்ற வளாகத்திலேயே கொலைகள் நடப்பது முதல், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கையில், சட்டத் துறை அமைச்சர் சிறிதேனும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ajith shalini 25 years anniversary celebratio video viral on social media எனக்கு போதும் நீங்க சாப்புடுங்க- ஷாலினிக்கு அன்போடு கேக் ஊட்டிவிட்ட அஜித்! அப்படி என்ன விசேஷம்?