பாமக முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு…. 5 தொகுதிகளில் புதிய சிக்கல்…? பரிதவிக்கும் ராமதாஸ், அன்புமணி…?
Author: Babu Lakshmanan20 March 2024, 8:07 pm
அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா? அல்லது பாஜகவுடன் அணி சேர்வதா? என்ற குழப்பத்தில் இரு பக்கமும் பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக ஒரு வழியாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. அப்போது அதை பாமக தலைவர் அன்புமணி உடனடியாக மறுத்தார். அதிமுகவுடன் அப்படி கூட்டணி பேச்சு எதுவும் நடத்தப்படவில்லை என்று உறுதியாக அறிவிக்கவும் செய்தார்.
இதனால் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதையே விரும்புகிறார் என்பது வெளிப்படையாக தெரிந்து விட்டது. பிறகு ஏன் அதிமுக, பாஜக என மாறி மாறி கூட்டணிப் பேச்சுவார்த்தையை பாமக ஒரு மாதம் இழுத்தடித்தது என்பதுதான் புரியவில்லை.
இந்த நிலையில்தான் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சேலம் வருவதற்குள் பிப்ரவரி 19ம் தேதி காலை மத்திய அமைச்சர் எல் முருகன், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் தைலாபுரம் சென்று டாக்டர் அன்புமணி முன்னிலையில் கூட்டணி பேச்சு நடத்தி அதற்கு டாக்டர் ராமதாசிடம் சம்மதமும் பெற்று விட்டனர்.
இதைத்தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாமகவுக்கு தர்மபுரி, சிதம்பரம், விழுப்புரம், கடலூர், ஆரணி, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், சேலம், மத்திய சென்னை, திண்டுக்கல் என பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிப்ரவரி 1ம் தேதி சென்னையில் நடந்த பாமக சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது தான் எதிர்கால அரசியலுக்கு நல்லது என்ற விருப்பத்தை தெரிவித்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது. இது போன்ற நிலையில் கடைசி நிமிடத்தில் பாஜக பக்கம் பாமக தாவியதை கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளும் தொண்டர்களும் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏனென்றால் இது தொடர்பாக பாமக இளைஞர்கள் இருவர் செல்போனில் பேசிக் கொள்ளும் ஆடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
போதாக்குறைக்கு வன்னியர் சங்கத் தலைவராக பதவி வகித்து மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை சென்னையில் செய்தியாளர்களை அண்மையில் சந்தித்து பேசியபோது பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை வன்மையாக கண்டித்தார்.
“சமூக நீதி மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்பட்டது சுயநலம். சமூக நீதி, இட ஒதுக்கீடுக்காக பாமக குரல் கொடுத்து வந்தது. ஆனால் இந்த நலன்களை பார்க்காமல், அதற்கு எதிராக இருக்கும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருக்கின்றனர். இந்த முடிவு, கட்சியில் பல நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், திடீரென நள்ளிரவில் அவசர அவசரமாக பேசி, மறுநாள் காலை பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்து இருப்பது கட்சியில் பிரதானமாக இருக்கும் வன்னியர் சமூக மக்களுக்கு கூட எதுவும் செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியில் எந்த அடிப்படையில், என்ன கோரிக்கை வைத்தோம் என்பதைக் கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.
ராமதாஸ் மற்றும் அன்புமணி நலன் பெற மட்டுமே கட்சியை மாற்றி இருக்கின்றனர். கட்சி உருவாக காரணமாக இருந்து உயிர்நீத்த 25 பேரின் குடும்பங்களுக்கு நிதி உதவியை கூட பாமக செய்யவில்லை. அவர்களுக்கு வீடு கட்டி தருவதாக சொன்னார்கள். அதையும் நிறைவேற்றவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்போம்” என்று குறிப்பிட்டனர்.
இந்த நிலையில்தான் தொடர்ந்து பல தேர்தல்களில் பாமகவுக்கு ஆதரவாக இருந்து வந்த 34 வன்னியர் அமைப்புகளை கொண்ட அகில இந்திய வன்னியர் குல சத்திரியர்கள் சங்கம் அதிமுகவுக்கு தனது ஆதரவை அறிவித்தவுடன் மட்டுமின்றி அக்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறியிருக்கிறது.
ஜாதி வாரி கணக்கெடுப்பை அதிமுக வலியுறுத்துவதாலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசு நிறைவேற்றியதாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக வன்னியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.
பாஜக கூட்டணியில் பாமக இணைந்ததால் இது போன்ற நெருக்கடிகளை டாக்டர் ராமதாஸும், அவருடைய மகன் அன்புமணியும் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பாமகவுக்கு உள்ள ஐந்து சதவீத ஓட்டுகளும் அப்படியே பாஜக கூட்டணிக்கு போய் சேருமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஓரிரு சதவீத வாக்குகள் வரை அதிமுக கூட்டணி பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகளே அதிகம்.
இதைவிட மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விதமாக பாமக போட்டியிடும் பத்து எம்பி சீட்டுகளில் அக்கட்சி நான்கு தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படலாம் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.
இது குறித்து மூத்த அரசியல் நோக்கர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கொஞ்சம் கேட்போம்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவனம் விவசாய நிலங்களை ஜேசிபி எந்திரங்கள் மூலம் கையகப்படுத்தியபோது டாக்டர் அன்புமணி பாமக தொண்டர்களுடன் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தார். அது வன்முறையாகவும் வெடித்தது. ஏராளமான அரசு வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
என்எல்சி தமிழகத்தில் இயற்கை வளங்களை அழித்துவிட்டது என்றும் அப்போது மத்திய பாஜக அரசு மீது அன்புமணி நேரடியாகவே குற்றமும் சாட்டினார்.
அன்று இப்படி ஆவேசமாக குரல் எழுப்பிய அன்புமணி நெய்வேலி சட்டப்பேரவை தொகுதி அடங்கிய கடலூர் நாடாளுமன்ற எம் பி சீட்டை பாஜகவிடம் எப்படி கேட்டு வாங்கினார் என்பதுதான் மிகுந்த ஆச்சரியமாக உள்ளது.
திமுக கூட்டணியில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், பண்ருட்டி
எம்எல்ஏவுமான வேல்முருகன் இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அநீதி இழைத்ததால் நான் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதே இல்லை. அக் கட்சிக்காக நான் பிரச்சாரமும் செய்ய மாட்டேன் என்று பகிரங்கமாகவே கூறி வருகிறார்.
வேல்முருகன் பாமகவில் இருந்து வெளியேறி தனிக்கட்சி தொடங்கியவர் என்பதால் அவருடைய கட்சியினர் பாமகவுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பது வெளிப்படை. இதனால் கடலூர் மாவட்டத்தில் தனக்கென்று ஓரளவு வாக்கு வங்கியை வைத்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி. இதனால் அதிமுக கூட்டணியில் எந்த கட்சி நின்றாலும் அக் கட்சிக்கான வெற்றி வாய்ப்பு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.
இதேபோல்தான் ஜெயங்கொண்டத்தை பூர்வீகமாக கொண்ட மறைந்த காடுவெட்டி குரு,
டாக்டர் ராமதாஸுக்கு வலதுகரமாக திகழ்ந்தவர். அவருக்கு அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தனி செல்வாக்கும் உண்டு. அவருடைய குடும்பத்தினர் தற்போது அதிமுக பக்கம் சாய்ந்து தீவிர தேர்தல் பிரசாரமும் செய்ய இருப்பதால் சிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம். இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக அல்லது திமுகவின் கையே ஓங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
தென் மாவட்டங்களில் போட்டியிட வேண்டும் என்று பாஜக கேட்டுக் கொண்டதற்காக திண்டுக்கல் தொகுதியில் பாமக போட்டியிடுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஏனென்றால் இந்த தொகுதிக்கும், பாமகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா இந்த மாவட்டத்தை சேர்ந்தவர்.
அவருக்காக கேட்டு வாங்கினார்களா என்பது தெரியவில்லை. மேலும் திண்டுக்கல் சட்டப்பேரவை தொகுதியில் மட்டுமே பாஜகவிற்கு ஓரளவிற்கு வாக்குகள் கிடைக்கும். மற்ற ஐந்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் அதிமுக, திமுகவுக்குதான் சரி சமமான வாக்குகள் உண்டு.
இங்கு திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் களம் காண்கிறது. அதிமுக கூட்டணியில் எஸ் டி பி ஐ கட்சி போட்டியிடுகிறது. முஸ்லிம்கள் கணிசமாக வசிக்கும் தொகுதி என்பதால் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி இடையேதான் இங்கு கடும் போட்டி இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிகிற ஒன்று.
இதேபோல்தான் மத்திய சென்னையில் பாமகவின் நிலைமையும் உள்ளது. இங்கு அக்கட்சிக்கு என்று தனிப்பட்ட முறையில் பெரிதாக வாக்கு வங்கி எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க பாஜக ஓட்டுகளை நம்பித்தான் பாமக இருக்கிறது.
இங்கு வெற்றி பெறப்போவது திமுக வேட்பாளர் தயாநிதி மாறனா? அல்லது அதிமுக கூட்டணியா? என்ற கேள்விதான் எழுகிறது. ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் கடலூர், சிதம்பரம், திண்டுக்கல், மத்திய சென்னை ஆகிய நான்கு தொகுதிகளில் பாமகவுக்கும், பெரம்பலூரில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கும் சிக்கல் முளைத்துள்ளது.