சமூக நீதி பற்றி நீங்க பேசலாமா..? நீங்க கடிதம் எழுதிய 37 தலைவர்களின் தராதரம் தெரியுமா..? முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து அண்ணாமலை கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
4 February 2022, 1:50 pm

சென்னை : சமூக நீதி அமைப்பில் இணையுமாறு 37 அரசியல் கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், அதனை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- குடும்ப அரசியல்‌ நடத்தும்‌ தமிழக முதல்வர்‌ மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ உருவாக்கியிருக்கும்‌ சமூகநீதி கூட்டமைப்பு யாருக்கானது? தமிழகத்தில்‌ திமு கழகம்‌ ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள்‌ முடியப்‌ போகின்றது. எங்கள்‌ ஆட்சி “விடியல்‌ ஆட்சி” என்றார்கள்‌. மோடி அரசின்‌ திட்டங்களுக்கு ஸ்டிக்கர்‌ ஒட்டும்‌ வேலை தான்‌ நடந்து வருகின்றது.

“ஓட்டுப்‌ போடாதவர்களும்‌ எங்களை விரும்புகின்ற அளவுக்கு நாங்கள்‌ ஆட்சி நடத்துவோம்‌” என்றார்‌. தமிழகத்தில்‌ எங்கு தொட்டாலும்‌ ஊழல்‌, எதற்குள்‌ நுழைந்தாலும்‌ கட்டிங்‌. நேர்மையான அதிகாரிகள்‌ என்று பிம்பமாக்கப்பட்டவர்களை நியமித்துப்‌ பாதுகாப்பு அரண்‌ போல எல்லா இடங்களிலும்‌ தங்களுக்குச்‌ சாதகமான ஊழலில்‌ பெயர்‌ பெற்ற அதிகாரிகள்‌ மூலம்‌ தமிழகத்தைச்‌ சூறையாடுவது தான்‌ நடந்து வருகின்றது. மிகக்‌ குறுகிய காலத்திற்குள்‌ மிக மோசமாக தமிழக நிர்வாக அமைப்பை மாற்றியதில்‌ தமிழக முதல்வர்‌ வெற்றி பெற்றுள்ளார்‌.

தமிழக முதல்வர்‌ இப்போது புதிய அவதாரம்‌ ஒன்றை எடுத்துள்ளார்‌. பொங்கல்‌ பரிசைக்‌ கூடச்‌ சிறப்பாக கொடுக்க முடியாத நிர்வாகம்‌ நடத்தி வரும்‌ தமிழக முதல்வர்‌, அதில்‌ நடந்த ஊழல்‌ குறித்து இன்று வரையிலும்‌ பேசாமல்‌ இருப்பவர்‌ இன்று புதிதாக அனைத்திய சமூக நீதி கூட்டமைப்பு என்பதனைத்‌ தொடங்கி 37 தேசியத்‌ தலைவர்களுக்குக்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்‌. அதில்‌ “சமத்துவம்‌, சுயமரியாதை மற்றும்‌ சமூகநீதியைக்‌ காக்க நாம்‌ அனைவரும்‌ ஒன்றிணைய வேண்டும்‌” என்று கூறியுள்ளார்‌.

யாருக்கெல்லாம்‌ இந்தக்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்‌ என்பதனை நாம்‌ பார்த்தால்‌ அவர்களின்‌ தகுதியும்‌ தராதரமும்‌ நமக்குப்‌ புரியும்‌?

தங்கள்‌ குடும்ப உறுப்பினர்களைத்‌ தவிரத்‌ தமிழகத்தில்‌ வேறு எவரும்‌ கட்சித்‌ தலைமைக்கு வந்து விடக்கூடாது என்பதில்‌ அதிக அக்கறை கொண்டுள்ள திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்களைப்‌ போலவே கடந்த 75 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர்‌ என்ற பகுதியை இந்தியாவின்‌ பிரச்சனைக்குரிய பகுதியாக தங்கள்‌ சுய லாபத்துக்காக மூன்று தலைமுறையாக வைத்திருந்த திரு. பரூக்‌ அப்துல்லா,

  • ஐந்து தலைமுறை நேரு பரம்பரையில்‌ எச்சமும்‌ சொச்சமாக இடைச்செருகலாக வந்து பொம்மை மூலம்‌ இந்தியாவை ஆள முடியும்‌ என்று நிரூபித்த திருமதி சோனியா அம்மையார்‌
  • தன்‌ குடும்ப சுயநலத்துக்காக பீகார்‌ என்ற மாநிலத்தையே புதைகுழிக்குள்‌ வைத்து மக்கள்‌ எழமுடியாத அளவுக்குக்‌ கடந்த காலத்தில்‌ காட்டாட்சி புரிந்த லல்லு பிரசாத்‌ யாதவ்‌ , ஊழலுக்கென்று இந்திய அரசியல்‌ வரலாற்றில்‌ புதிய அத்தியாயம்‌ உருவாக்கிய சரத்பவார்‌,
  • இந்தியாவில்‌ மோடி அவர்களின்‌ நிர்வாகத்‌ திறமையைக்‌ கண்டு கால்‌ நூற்றாண்டுக்‌ காலம்‌ ஆட்சியில்‌ இருந்த மாநிலங்களில்‌ வேரடி மண்ணோடு புடுங்கி எறியப்பட்ட இரண்டு கம்யூனிஸ்ட்கள்‌ டி. ராஜா, சீதாராம்‌ யெச்சூரி
  • காவல்துறை ஆணையர்கள்‌ என்பவர்கள்‌ எங்களுக்கு மாதாந்திர தண்டல்‌ வசூலித்துத்‌ தரக்‌ கடமைப்பட்டவர்கள்‌ என்று அலங்கோல ஆட்சி நடத்தி வரும்‌ உத்தவ்‌ தாக்ரே
  • அலங்கோல ஆட்சி நடத்துவதே என்‌ பாணி என்று மேற்கு வங்க மண்ணின்‌ மைந்தர்களைக்‌ கூட்டு பாலியல்‌ செய்ததை கை கட்டி வேடிக்கை பார்த்த மம்தா பானர்ஜி அம்மையார்‌ என்று மொத்தம்‌ 37 பேருக்குக்‌ கடிதம்‌
    எழுதியுள்ளார்‌.

இன்றைய சூழலில்‌ தமிழகத்தில்‌ காவேரி நதி நீர்‌ பிரச்சனை வைத்து அரசியல்‌ செய்ய முடியாது. கச்சத்தீவு வாயே திறக்க முடியாது. இலங்கை பிரச்சனை பற்றிப்‌ பேசுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லை தாண்டும்‌ மீனவர்கள்‌ பிரச்சனைகளும்‌ அவ்வப்போது முடிவுக்கு வந்து விடுகின்றது. முல்லைப்‌ பெரியாறு என்பது முடிந்து போன ஒன்று. கடந்த ஜம்பது ஆண்டுகளாக காங்கிரஸ்‌ ஆட்சியில்‌ இருந்த போதும்‌, அவர்களுடன்‌ திமுக கூட்டாளியாக இருந்த சமயங்களில்‌ எல்லாம்‌ எதைப்‌ பற்றியும்‌ பேசியதில்லை. எந்த உரிமை பிரச்சனைகளையும்‌ மாமன்றத்தில்‌ கொண்டூ வந்ததும்‌ இல்லை.

கலைஞர்‌ ஒரே ஒரு விசயத்தில்‌ உறுதியாக இருந்தார்‌. 1999க்குப்‌ பிறகு கலைஞர்‌ மத்திய அரசில்‌ பங்கெடுப்பதை அட்சய பாத்திரத்தைக்‌ கைப்பற்றுவதாகவே கருதினார்‌. அப்படியே செயல்பட்டார்‌.

காங்கிரஸ்‌ இட ஒதுக்கீடு விசயங்களில்‌ என்ன சாதித்தது? ஓபிசி இட ஒதுக்கீடு ஏன்‌ இத்தனை ஆண்டு காலம்‌ தாமதம்‌ ஆனது? இந்தியாவை நேரிடையாகவும்‌, மறைமுகமாகவும்‌ அரை நூற்றாண்டுக்காலம்‌ ஆட்சி செய்த காங்கிரஸ்‌ கட்சியுடன்‌ திமுக 17 ஆண்டுகள்‌ அதிகாரத்தைச்‌ சுவைத்து தமிழகம்‌ என்ன பெருமை அடைந்தது?

இந்தியர்கள்‌ “பொது சுகாதாரம்‌” என்ற வார்த்தையே 2014 மோடி அவர்கள்‌ ஆட்சிக்கு வந்த பின்பு தானே உணரத்‌ தொடங்கினார்கள்‌. உங்களுக்கு கும்மிடிப்பூண்டி தாண்டி என்ன நடக்கின்றது என்பதே தெரியாது? காரணம்‌ மொழி அரசியல்‌. பிரதேச அரசியல்‌. சமூக நீதி என்ற பெயரில்‌ சாதீய அரசியல்‌ என்று தமிழர்களை எக்காரணம்‌ கொண்டு
வளர்ந்து விடவே கூடாது என்று திட்டமிட்டு திருட்டுத்தனம்‌ செய்து கொண்டு இருப்பது இனியும்‌ நடக்காது. நடக்கவும்‌ விட மாட்டோம்‌.

கலைஞர்‌ இருந்தவரைச்‌ சமூகநீதிக்‌ காவலராக வேடம்‌ தரித்துப்‌ பொய்யும்‌ புனைச்‌ சுருட்டுமாக கதை வசனம்‌ எழுதி தமிழர்களை நம்ப வைத்துக்‌ கொண்டிருந்ததை இன்று நீங்கள்‌ கையில்‌ எடுத்திருப்பது வருத்தமாக உள்ளது. “காலத்திற்குத்‌ தேவைப்படாத அனைத்தும்‌ காலாவதியாகிப்‌ போகும்‌” என்பதனை அறியாதவரா நீங்கள்‌?

ஆர்ப்பாட்டம்‌ இல்லாமல்‌, அவசரப்படாமல்‌, பாரபட்சமின்றி, மத பாகுபாடின்றி உள்கட்டமைப்பு வசதிகள்‌ முதல்‌ சமூக நீதிக்கான அடித்தளம்‌ வரை அனைத்தையும்‌ கடந்த ஏழு ஆண்டுகளில்‌ மிகச்‌ சிறப்பாக வடிவமைத்த மோடி அவர்களை அடுத்த 10௦ ஆண்டுகள்‌ இந்தியர்கள்‌ தங்கள்‌ மனதில்‌ வைத்திருப்பார்கள்‌. இதுவே இன்று எதிர்க்கட்சியினருக்கு உறுத்தலாக உள்ளது. நாளொரு மேனியும்‌ பொழுதொரு வண்ணமும்‌ இந்தியாவைப்‌ பின்னுக்கு இழுக்கக்கூடிய அனைத்து விசயங்களிலும்‌ கவனம்‌ செலுத்தி பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கின்றார்கள்‌.

ஒவ்வொருவரும்‌ பிரதமர்‌ கனவில்‌ மிதக்கின்றார்கள்‌. வடக்கே ராகுல்‌. மேற்கே மம்தா பேனர்ஜி. தெற்கே ஸ்டாலின்‌. இப்படித்தான்‌ முலாயம்சிங்‌ யாதவ்‌ மற்றும்‌ லல்லு பிரசாத்‌ யாதவ்‌ அவர்களும்‌ ஒரு காலத்தில்‌ பிரதமர்‌ பதவிக்குப்‌ போட்டுப்‌ போட்டுக்கொண்டு இருந்தார்கள்‌? இன்று அவர்களுக்கு மக்கள்‌ கொடுத்த தண்டனை என்ன? இரண்டு குடும்பத்திலிருந்தும்‌ அவரவர்‌ வாரிசுகள்‌ தான்‌ அரசியலுக்கு வந்துள்ளனர்‌.

இங்கே கலைஞருக்குப்‌ பின்னால்‌ ஸ்டாலின்‌. இவருக்குப்‌ பின்னால்‌ உதயநிதி என்ற படிக்கட்டு போல மக்கள்‌ ஜனநாயகத்தைச்‌ சீர்குலைக்கும்‌ நீங்கள்‌ தான்‌ இன்று சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கி இருக்கின்றீர்கள்‌?. உங்கள்‌ மகன்‌ பட்டாபிஷேகத்திற்காகக்‌ காத்திருப்பது போலக்‌ கடிதம்‌ எழுதிய 37 தேசியத்‌ தலைவர்களின்‌ குடும்பம்‌ தான்‌ அந்தந்த மாநில அரசியலைத்‌ தீர்மானிக்கின்றது. இதன்‌ காரணமாகவே அந்தந்த மாநில மக்களால்‌ தூக்கி எறியப்பட்டு இன்று அரசியல்‌ அனாதை ஆகியுள்ளனர்‌, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 1480

    1

    0