அன்று காங்கிரஸ்.. இன்று கொ.ம.தே.க… சுயமரியாதை பற்றி பாடம் எடுத்தால் போதுமா..? முதல்ல மதிக்கனும்… திமுக மீது அண்ணாமலை பாய்ச்சல்..!!
Author: Babu Lakshmanan12 July 2022, 11:55 am
கூட்டணி கட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படவில்லை என்று திமுக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சார்ந்த ஏகேபி சின்ராஜ், நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார். இவர், கடந்த சில நாட்களாக அரசு கட்டிடங்களில் உள்ள குறைகள் குறித்தும், மக்களின் குறைகள் பற்றியும் பலமுறை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அவர் அளித்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனிடையே, இரு நாட்களுக்கு முன்பு, லத்துவாடி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் தலையீடு அதிகம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் எம்.பி. சின்ராஜிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து லத்துவாடி ஊராட்சிக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளும் போது, ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கு ஊராட்சிமன்ற தலைவர் பரமேஸ்வரி பூட்டு போட்டுவிட்டு அங்கிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை வழங்குமாறு ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது, அவர் சாவியை வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சின்ராஜ் புகார் அளித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் எம்பி சின்ராஜ் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி நிர்வாகி ஒருவர், புகார் குறித்து ஆய்வு செய்யச் சென்ற கூட்டணி கட்சி பிரதிநிதியை மதிக்காமல் செயல்பட்டதால், எம்பி ஆட்சியர் அலுவலகத்தில் எம்பி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு திமுகவிடம் இருந்து உரிய மரியாதை கிடைப்பதில்லை எனச் சுட்டிக் காட்டிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உள்ளாட்சி தேர்தலுக்கான இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் எம்பியை திமுகவினர் அவமதிப்பு, அலுவலகத்தில் இருந்து வெளியேற்றிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் விடுத்துள்ள பதிவில், ஜனவரி மாதத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் திமுக அலுவலகத்திலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். நேற்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் எம்பி சின்ராஜ் அவர்கள் மரியாதையின்மையைச் சுட்டிக்காட்டி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
சுயமரியாதை பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கும் இந்த திமுக அரசு தனது கூட்டணியில் உள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மட்டும் மறந்து விடுவார்கள் போல,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்தப் பேச்சைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் திமுக மற்றும் பாஜகவினர் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.