முதலமைச்சர் ஸ்டாலின் பொய் சொன்னாரா…? அனல் பறக்கும் அரசியல் களம்…!

Author: Babu Lakshmanan
10 July 2023, 7:55 pm
Quick Share

சென்னையில் நடந்த ஒரு திருமண விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது பிரதமர் மோடி மீது ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அது தமிழக அரசியலில் சூறாவளியாய் சுழன்றடித்து வருகிறது. தமிழக முதலமைச்சரே மோடி மீது கேள்விக்கணை தொடுத்திருப்பது பெரும் விவாதப் பொருளாகவும் மாறி உள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்தபோது, ஸ்டாலின் பேசியது இதுதான்.

“2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி, வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் கருப்பு பணத்தை எல்லாம் மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் யாருடைய வங்கிக் கணக்கிலும் சொன்னது போல் 15 லட்சம் ரூபாய் செலுத்தவில்லை. வேண்டாம். ஒருவருடைய வங்கிக் கணக்கில்
15 ஆயிரம் ரூபாயாவது வழங்கினாரா?… அது கூடவேண்டாம் 15 ரூபாயாவது போட்டாரா?
இதைப் பற்றியெல்லாம் அவர் இதுவரை சிந்திக்கவே இல்லை. கேட்கவும் இல்லை. அதைப் பற்றி பேசவும் இல்லை” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

பிரதமரை குறி வைத்து ஸ்டாலின், இப்படி பேசியதால் அது அத்தனை டிவி செய்தி சேனல்களிலும் தலைப்புச் செய்தியாக வெளியானது. பிரதான நாளிதழ்களிலும் அச் செய்தி இடம் பிடித்திருந்ததையும் காண முடிந்தது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,” இன்றைக்கு நாட்டுக்கு பேராபத்து வந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பேராபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நாட்டின் தலைமை பொறுப்பை வகிக்கும் பிரதமர் மோடி, தான் பிரதமர் என்பதை மறந்து ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார், வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருக்கிறார்.

அதைப்பற்றியெல்லாம் நாம் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. எத்தகைய நிலைமை ஏற்பட்டாலும், ஏன் ஆட்சிக்கு ஆபத்து என்றாலும் கூட அதைப்பற்றி இம்மியளவு கூட நாம் கவலைப்பட வேண்டியதில்லை” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கோபம் கொப்பளிக்க பேசியதை விட 15 லட்ச ரூபாயை வங்கிக் கணக்கில் போடுவதாக மோடி சொன்னாரே? செய்தாரா? என்ற கேள்விதான் முன்னிலைப்படுத்தப்பட்டு இருந்தது.

முதலமைச்சரின் இந்த பேச்சுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக மறுப்பு தெரிவித்தார். உண்மையிலேயே ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் மோடி இந்தியில் என்ன பேசினார் என்பதை தமிழிலும் மொழிபெயர்த்து அது குறித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டார்.

மேலும் அண்ணாமலை கூறும்போது, “தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு தோல்வி பயம் மூண்டு விட்டதுபோல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்தி வரும் ஸ்டாலின், 2014ம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார்.

மோடி அப்படி சொல்லவே இல்லை. அவ்வளவு பணத்தை வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொன்னாரே தவிர அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி சொல்லவில்லை.

கடந்த 9 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும் நமது நாட்டில் 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் ஊழல் திமுக அரசின் முதலமைச்சருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. முதலமைச்சரின் மகன் சம்பந்தப்பட்ட 1,000 கோடி ரூபாய் நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும் இந்த திமுக அரசு?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியும் இருக்கிறார்.

வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வேன் என்ற வாக்குறுதியை மோடி தேர்தல் பிரசாரத்தில் அளித்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் மட்டுமல்ல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
2019 தேர்தலின்போதே எழுப்பினார். டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இதே குற்றச்சாட்டை வைத்தது.

அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான குலாப் சிங் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று பிரதமர் மோடியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதியை இன்னும் நினைவில் வைத்திருக்கும் அதே வேளையில், கெஜ்ரிவாலின் உறுதிமொழிகளை மக்கள் எப்படி நம்பத் தொடங்கினர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றில் வெளியான கட்டுரையை சுட்டிக்காட்டி எச்.கே. சிங் என்ற வழக்கறிஞர், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா இருவருக்கும் எதிராக ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார், அதில் ஒவ்வொரு நபரின் வங்கியிலும் 15 லட்சம் டெபாசிட் செய்வதாக உறுதியளித்து பொதுமக்களை மோடி ஏமாற்றியதாக குற்றம்சாட்டியும் இருந்தார்.

டெல்லியில் மூத்த அரசியல் நோக்கர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள்?… “பல கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து 15 லட்ச ரூபாய் டெபாசிட் பற்றியே பேசி வந்ததால் இது தொடர்பான உண்மைத் தன்மையை சில அமைப்புகள் தீவிரமாக ஆய்வு செய்தபோது, மோடி 2014 தேர்தலில் அப்படியொரு வாக்குறுதியே அளிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஏனென்றால் சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கேர் நகரில் 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த பாஜக பேரணியில் மோடி பேசும்போது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்களை கடுமையாக சாடினார்,

அப்போது,”இந்த மோசடியாளர்கள் வெளிநாட்டு வங்கிகளில் குவித்து வைத்துள்ள பணத்தை, நாம் திரும்பக் கொண்டு வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கும் வங்கி கணக்கில் 15 முதல் 20 லட்ச ரூபாய் வரும் அளவுக்கு அங்கே பணம் உள்ளது” என்றுதான் குறிப்பிட்டார். தவிர 2014ம் ஆண்டுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்ற எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை.

மேலும் 2016-ம் ஆண்டு நவம்பர் 16-ம் தேதி, மோகன்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பிரதமர் மோடி எப்போது மக்களின் வங்கிக் கணக்கில்
15 லட்ச ரூபாயை செலுத்துவார் என்ற கேள்வியை எழுப்பி பணம் செலுத்தப்படும் தேதியை குறிப்பிடுமாறும் கேட்டிருந்தார். இந்தக் கேள்வியை பிரதமர் அலுவலகம், ரிசர்வ் வங்கிக்கும் அவர் அனுப்பி வைத்தார்.

மோகன்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமை ஆணையத்தின் அப்போதைய தலைவர் ஆர்.கே.மாத்தூரிடம் மோகன் குமார் புகாரும் அளித்தார். பின்னர் ஆர்.கே.மாத்தூர் முன்னிலையில் விசாரணையும் நடந்தது. அதற்கு பிரதமர் அலுவலகம் சார்பில் விளக்கமும் அளிக்கப்பட்டது. அதில், பிரதமர் மோடி அவ்வாறு வாக்குறுதி எதுவும் தரவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. 

இதுபோன்று எதிர்க்கட்சிகள் சார்பில் தவறான தகவல்கள் பரப்பப்படும் போதெல்லாம் அதற்கு பாஜக தலைவர்கள் பிரதமர் மோடி அப்படி சொல்லவில்லை என்று அவர் பேசிய வீடியோ காட்சிகளை வெளியிட்டு மறுத்தும் வந்திருக்கிறார்கள்.

ஆனாலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதைப் பற்றியெல்லாம் அறிந்துகொண்டு பேசியதாக தெரியவில்லை. நாட்டின் உயர் பதவி வகிக்கும் ஒரு தலைவர் மீது ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கடுமையான குற்றச்சாட்டை வைக்கும் முன்பாக அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முழுமையாக அறிந்து கொண்டு பேசுவதுதான் அவர் பதவிக்கு அழகு. இல்லையென்றால் ஸ்டாலின் பொய்யான தகவலை தருகிறார் என்ற அவப்பெயர்தான் அவருக்கும் அவருடைய கட்சிக்கும் ஏற்படும்.
தேசிய அளவில் அரசியலை முன்னெடுக்க விரும்பும் அவருக்கு இதுபோன்ற பேச்சுகள் எந்த விதத்திலும் பலன் அளிக்காது” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 244

0

1